பொதுவாக வெள்ளித்திரையை விட சின்னத்திரை நடிப்பவர்களை ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. கேரக்டருக்கு ஏற்ற மாதிரி தோற்றம் கொண்டவர்களை அடுத்த சீரியல், அல்லது படங்களில் இந்த கேரக்டரில் அவர் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நாமே பரிந்துரை செய்யும் அளவுக்கு பிரபலமாவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் பிர்லா போஸ்.
தருமபுரி மாவட்டம் பாலகோட்டைச் சேர்ந்த இவர் தனது கல்லூரி படிப்பை முடித்தப் பிறகு தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு போலீசாக நினைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக சென்னை வந்த பிர்லா போஸூக்கு போலீஸ் வேலை கிடைக்கவில்லை. அதனால் படிப்பு சார்ந்த வேலைக்கு செல்ல முடிவெடுத்த நிலையில், பிர்லா டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. அதுவே வெறும் போஸ் ஆக இருந்த அவரை பிர்லா போஸ் ஆக மாற்றியது.
சினிமாவுக்கு வருவதற்கு முன் வாழ்க்கையில் பல விஷயங்களில் எடுத்த போராட்டங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்தது. அதனால் இதையும் ஒரு கை பார்த்து விடுவோமே என்ற எண்ணத்தில் திரைத்துறைக்குள் அடியெடித்து வைத்துள்ளார்.
விஜய்யுடனான நட்பு
”எனக்கும் விஜய்க்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது. அவர் அவ்வளவு எளிதாக யாரிடம் கனெக்ட் ஆக மாட்டார். ஆனால் கனெக்ட் ஆகிவிட்டால் அவர்களை விட்டு பிரியவும் மாட்டார். ஆனால் அவருக்கும் எனக்கும் ஏதோ ஒரு இடத்தில் தவறான புரிதல் ஏற்பட்டு விட்டது. கண்டிப்பாக அதுக்கு காரணம் நான் இல்லை என்பதை இந்த நேர்காணல் மூலமாக சொல்லிக் கொள்கிறேன்.
சிவகாசி படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அந்த படத்தின் இயக்குநர் பேரரசு என்னை வர சொல்லியிருந்தார். நானும் போனேன். அப்போது விஜய்யுடன் ஒருவர் இருந்தார். அவர் ஏற்கனவே சுக்ரன் படத்தின் போது விஜய்யுடன் இருப்பதாக கூறி தானாகவே வந்து தன்னை அறிமுகப்படுத்தியிருந்தார். இதனால் இந்த ஷூட்டிங்கில் அவரை பார்த்ததும் நான் என்ன சார் நல்லா இருக்கீங்களா? என கேட்டேன்.
உடனே என்னை பார்த்து, வாய்ப்பு வேணும்னா எதுக்கு இங்கே வர்றீங்க? ப்ரொடியூசர் ஆபீஸ்ல போய் பாருங்க என அந்த நபர் கூறிவிட்டார். இவர் ஏன் இப்படி நடக்கிறாரு என நினைத்த நிலையில் எங்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் விஜய் பாடலுக்கு நடனமாட சென்று விட்டார். பின் இந்த பிரச்சினையில் வெளியே வெயிலில் நின்று கொண்டிருந்தேன். ஷூட் முடித்து வந்த விஜய், ஏன் வெளியே நிற்கிறாய்? உள்ளே வா என அழைத்தார். அப்படிப்பட்ட நட்பு எங்களுடையது.
ஆனால் நான் நடந்த சம்பவத்தை நினைத்து அவர் பேச்சை கேட்கவே இல்லை. எந்த வித ரெஸ்பான்ஸ் பண்ணவில்லை. இதை இப்போது நினைத்தால் குழந்தைத்தனமாக இருக்கிறது. எனக்கும் அந்த நபருக்கும் சண்டை நடந்தது விஜய்க்கு தெரியாது” என பிர்லா போஸ் கூறியுள்ளார்.