ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


ஆரம்பமே சொதப்பல்:


நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி நிர்ணயித்த, 131 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  தொடக்க ஆட்டக்காரரான விரிதிமான் சாஹா 6 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.    


அடுத்தடுத்து சரிந்த விக்கெட்:


நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சுப்மன் கில்லும், வெறும் 6 ரன்களில் நடையை கட்டினார். அவரை தொடர்ந்து தமிழக வீரர் விஜய் சங்கர் 6 ரன்களிலும், அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லர் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் குஜராத் அணி 32 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 


பொறுப்பான கூட்டணி:


5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் பாண்ட்யா மற்றும் அபினவ் மனோகர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 56 பந்துகளில் இந்த கூட்டணி அரைசதம் கடந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் பாண்ட்யா, 44 பந்துகளில் அரைசதம் கெட்டினார். மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபினவ் மனோகர், 26 பந்துகளில் ஆட்டமிழந்தார்.


இறுதியில் அதிரடி


பரபரப்பான இறுதி கட்டத்தை போட்டி எட்டியபோது, குஜராத் அணி வெற்றி பெற கடைசி இரண்டு ஒவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்டது.  ஆனால், 19வது ஓவரை வீசிய நோர்ட்ஜே அந்த ஓவரில் மட்டும் 21 ரன்களை விட்டுக்கொடுத்தார்.ராகுல் திவேதியா ஹாட்ரிக் சிக்சர்களை அடித்து அசத்தினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய இஷாந்த் சர்மா சிறப்பாக வீசியதோடு, திவேதியா விக்கெட்டையும் வீழ்த்தினார்.  இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.


 


முதல் இன்னிங்ஸ்:


தொடரின் 44வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது.  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  


ஆரம்பமே சொதப்பல்:


டெல்லி அணிக்கு இன்னிங்ஸின் தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரரான சால்ட், ஷமி வீசிய போட்டியின் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஓவரில் எதிர்பாராத விதமாக கேப்டன் வார்னர் ரநவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த ரோஸோ 8 ரன்களிலும், மணீஷ் பாண்டே ஒரு ரன்னிலும், பிரியம் கார்க் 10 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், 23 ரன்களை சேர்ப்பதற்குள் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சரிவிலிருந்து டெல்லி அணியால் இறுதிவரை மீளவே முடியவில்லை.


பொறுப்பான ஆட்டம்:


இருப்பினும் 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த டெல்லி துணை கேப்டன் அக்‌ஷர் படேல் மற்றும் அமன் கான் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக விளையாடிய இந்த கூட்டணி 55 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, 27 ரன்கள் சேர்த்து இருந்தபோது அக்‌ஷர் படேல் ஆட்டமிழந்தார். அதேநேரம் பொறுப்புடன் விளையாடிய அமன் கான், 41 பந்துகளில் அரைசதம் எட்டினார். தொடர்ந்து 51 ரன்கள் சேர்த்து இருந்தபோது அவர் ஆட்டமிழந்தார்.


குஜராத் அணிக்கு இலக்கு:


இதனால், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி 125 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.