ஆஸ்கர் விருது வென்ற லியோ டிகாப்ரியோ யாரும் எதிர்பார்க்காத ஒரு பிரச்சினை பற்றி மேடையில் பேசினார்.


லியோனார்டோ டிகாப்ரியோ


லியோனார்டோ டிகாப்ரியோ பலமுறை ஆஸ்கருக்கு தேர்வாகியிருந்தாலும் அவன் தனது முதல் ஆஸ்கர் விருதை 2016ஆம் ஆண்டில் வென்றார். மெக்ஸிகன் இயக்குநர் இனாரிட்டோ இயக்கிய 'தி ரெவனண்ட்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. மெக்ஸிக பழங்குடி இனத்தின் போராட்டை மையமாக வைத்து இப்படம் உருவானது. இந்த விருதை பெற்றுக்கொண்டு மேடையில் அவர் பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. நடிப்பைப் பற்றியோ, சினிமாவைப் பற்றியோ, தனது தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியோ அவர் பேசவில்லை. மாறாக ஒட்டுமொத்த மனித சமுதாயமும் தற்சமயம் சந்தித்து வரும் ஒரு பிரச்னையை அவர் இந்த மேடையில் பேசினார்.

ஒரு நடிகர் என்பதற்கு அப்பால் டிகாப்ரியோ சுற்றுசூழலில் மேல் தீவிரமான அக்கறை கொண்டவர். காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் மற்ற எல்லா சமூக பிரச்னைகளைக் காட்டிலும், காலநிலை மாற்றம் எப்படி இப்பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரினத்திற்கும் ஆபத்தானது என்பதையே தனது ஆஸ்கர் உரையாகப் பேசினார் அவர். அவர் இப்படி பேசியதற்கு முக்கியமான காரணங்கள் இருந்தன.


காலநிலை மாற்றம் நம் கண்முன் நடக்கிறது


பூமியின் வெப்பநிலை கணக்கிடப்பட தொடங்கிய காலம், அதாவது 1880ஆம் ஆண்டில் இருந்து அதுவரை இல்லாத அளவு அதிக வெப்பம் 2015 இல் பதிவு செய்யப்பட்டது. காலநிலை மாற்றம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய தீவிரமான ஒரு பிரச்னை என்பதை உலக நாடுகள் உணர்ந்தன. அதற்கு அடுத்த 'Before The Flood' என்கிற ஆவணப்படத்தை லியோனார்டோ டிகாப்ரியோ இயக்கினார். உலகம் முழுவதும் பயணித்து கால நிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளை குறித்து பலதரப்பு மக்களிடம் விவாதித்தார். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் தங்களுடைய சுயநலத்திற்காக ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் அழிவுகளை அடையாளப்படுத்தினார்.

"மனிதனுக்கு இயற்கைக்குமான தொடர்பைப் பற்றிய படம்தான் தி ரெவனண்ட். வரலாற்றில் முதல் முறையாக பூமியின் அதிக அளவு வெப்பத்தை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு பனிப்பிரதேசங்களைத் தேடி பூமியின் தென் கோடிக்கே நாங்கள் செல்ல வேண்டியதாக இருந்தது.


காலநிலை மாற்றம் என்பது நம் கண்முன் நிகழ்ந்து வருகிறது. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் நாம் உடனடியாக செயலாற்ற வேண்டும். பூமியை மேலும் மாசுபடுத்தும் எண்ணம் இல்லாத தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். காலநிலை மாற்றத்திம் விளைவுகளை முதலில் சந்திக்கப் போவது விளிம்புநிலை மக்கள்.


அவர்களின் நலனுக்காகவும் பூர்வக்குடிகளின் உரிமைகளுக்காக பேசும் தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அரசியல் பேராசைகளினால் தங்களது குரலை இழந்து நிற்கும் மக்களுக்காக நமது குழந்தைகளின் குழந்தைகளுக்காக நாம் நாம் சிந்திக்க வேண்டும். இந்த விருதுக்காக நான் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தனது உரையில் கூறினார் டிகாப்ரியோ.