நெல்லை பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி அருகில் சாலையோர நடைபாதை உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து உணவு அருந்தி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வந்த வேகத்தில் சாலையோர கடையில் உணவு அருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் உணவகம் நடத்தி வந்த சிவசாமி அவரது மனைவி மாலையம்மாள், மகன் அருண் பாண்டி ஆகிய மூவர் மீது மோதியதுடன், கடையில் உணவு அருந்திக் கொண்டிருந்த செல்வ சுரேஷ்(38) அவரது மனைவி ஞான பிரியா(30), மகன்கள் சுபின் ராஜ்(9), சாம் காட்வின்(7) உட்பட ஏழு பேர் மீதும் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் சாலையில் நின்ற இருசக்கர வாகனம் ஒன்றும் சேதமடைந்தது,
குறிப்பாக கடை உரிமையாளர் சிவசாமி அடுப்பில் தோசை சுட்டுக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதால் அவருக்கு தீக்காயமும் ஏற்பட்டது. அவரது மனைவி மாலையம்மாளுக்கு காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. சிறுவர்கள் சாம் காட்வின் மற்றும் சுபின் ராஜ் இருவரும் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செல்வசுரேஷ் தனது குடும்பத்தினருடன் புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு சொந்த ஊரான முக்கூடல் செல்லும் வழியில் நெல்லையில் உணவருந்துவதற்காக இரவு கடைக்கு சென்று உள்ளார். இந்நிலையில் தான் சொகுசு கார் அவர்கள் மீது மோதியுள்ளது. சாலையிலிருந்த அனைவரும் அந்த காரை மடக்கி பிடித்தபோது அதில் 5 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் மதுபோதையில் காரை ஓட்டி வந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. காரை பொதுமக்கள் மடக்கி பிடித்தபோது அதில் முன்னாள் இருந்த டிரைவர் மற்றொருவர் என இருவர் தப்பியோடிய நிலையில் 3 பேர் பிடிபட்டனர்.
தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதோடு பிடிபட்ட மூவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வாகனங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் உணவு அருந்திக்கொண்டிருந்த சாலையோர கடை மீது மதுபோதையில் 5 பேர் கொண்ட கும்பல் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு இதில் 7 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.