தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


கலையுலக குடும்பம்


அனிருத் பாரம்பரியமான திரையுலக குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது கொள்ளு தாத்தா கே.சுப்பிரமணியம் இந்திய சினிமாவின் தொடக்க காலத்தில் இயக்குநரானவர்களில் மிக முக்கியமானவர். இவரது தந்தை ரவி ராகவேந்தர் தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகராக உள்ளார். அம்மா லட்சுமி செவ்வியல் நடனக் கலைஞராக உள்ளார். அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் இவருக்கு மாமா முறை என்பதால் சிறுவயதில் இருந்தே கலையுலகை சுற்றியே இவரது வாழ்க்கை அமைந்தது. 


குடும்பத்தில் இயக்குநர், நடிகர், நடனக்கலைஞர் என ஒவ்வொருவரும் ஒருதுறையை தேர்வு செய்ய அனிருத்துக்கு இசைத்துறையின் மேல் ஆர்வம் இருந்தது. பத்து வயது முதல் இசையமைத்து வரும் அவர் பள்ளி இசைக்குழுவில் பணியாற்றி வந்தார். அதேசமயம் லயோலா கல்லூரியில் டிகிரி முடித்த பிறகு லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் பியானோ இசையிலும், சவுண்ட் இன்ஜினியரிங்கிலும் தேர்ச்சி பெற்றார். இவர் கர்நாடகா இசையும் முறைப்படி பயின்றவர். 


குறும்படம் முதல் திரைப்படம் வரை 


நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கிய குறும்படங்களுக்கு கல்லூரி காலத்தில் இசையமைத்த அனிருத், கணவர் தனுஷை வைத்து அவர் இயக்கிய ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தின் முதல் பாடலாக ‘ஒய் திஸ் கொலவெறிடி’ வெளியாகி உலகளவில் ஹிட்டடிக்க, மற்ற பாடல்களும் ரசிகர்களின் பேவரைட்டாக அமைந்தது. அனிருத் பிரபலமாக தொடங்கினார். 






தொடர்ந்து சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், மிர்ச்சி சிவாவின் வணக்கம் சென்னை ஆகிய படங்களில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, யோயோ ஹனிசிங் ஆகிய ராப் பாடகர்களை அறிமுகம் செய்தார். இசையமைப்பாளராக இருந்த நிலையில் ‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு பின்னணி இசையமைத்து மிரள வைத்தார். அதன்பின்னர் 2014 ஆம் ஆண்டில் வேலையில்லா பட்டதாரி படத்திற்கு இசையமைத்து கவனம் பெற்றாலும், அதே ஆண்டில் வெளியான விஜய் நடித்த கத்தி படம் தான் அனிருத்திற்கு கிடைத்த முதல் டாப் ஹீரோவின் படம். அந்த நம்பிக்கைக்கு தகுந்த ரிசல்ட் கொடுத்தார். 


ரஜினி முதல் அஜித் வரை 


2015 ஆம் ஆண்டு முதல் அனிருத்துக்கு ஏறுமுகம் தான். காரணம் விஜயை தொடர்ந்து அஜித்தின் வேதாளம், விவேகம், சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் என படிப்படியாக முன்னேறியவருக்கு ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது தான் கார்த்திக் சுப்பாராஜின் “பேட்ட”. பல ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி இசையமைப்பாளருக்கும் கிடைக்காத அந்த வாய்ப்பு குறுகிய காலத்திலேயே கிடைப்பதற்கு காரணம் அனிருத்தின் ரசிக்க வைக்கும் இசை தான். 






தொடர்ந்து ரஜினியின் தர்பார்,கமல் நடித்த விக்ரம், விஜய் நடித்த பிகில், மாஸ்டர், பீஸ்ட், என அனிருத் தான் முன்னணி ஹீரோக்களின் பேவரைட் இசையமைப்பாளராக உள்ளார். இப்போதும் கூட ரஜினியின் ஜெயிலர், கமலின் இந்தியன் 2, அஜித்தின் 62வது படம், இந்தியின் ஷாரூக்கான் நடிக்கும் ஜவான் படம், தெலுங்கில் என்டிஆர் நடிக்கும் படம் என ஆல் ஏரியாவிலும் தான் கில்லி என்பதை அனிருத் நிரூபித்துள்ளார். 


பாடகர் அனிருத் 






தன்னுடைய படங்கள் மட்டுமல்லாமல் முன்னணி, இளம் இசையமைப்பாளர்கள் என அனைவரது இசையிலும் சூப்பர் ஹிட்டான பல பாடல்களை பாடி அசத்தியுள்ளார். அவரது குரலே வசீகரமானது என்னும் அளவுக்கு அப்பாடல் கேட்க கேட்க பிடிக்கும். ஏகப்பட்ட தனி ஆல்பங்களிலும் தனது முத்திரையை பதித்துள்ளார். 


இப்படியான அனிருத்தை சுற்றி சர்ச்சைகளும் உண்டு. இசை திருட்டு உள்ளிட்ட பல சம்பவங்களை காட்டி குற்றம் சொன்னாலும் தன்னுடைய இலக்கை நோக்கி அவர் சென்று கொண்டிருக்கிறார் என்பதே உண்மை. இதுவே அனிருத்தை ராக் ஸ்டார் ஆக கொண்டாட வைக்கிறது.