இந்திய திரையுலகின் மூத்த மற்றும் மிகப்பிரபலமான இசையமைப்பாளர் இளையராஜா. இவர் மட்டுமின்றி இவரது குடும்பத்தினரும் கலைத்துறையில் முக்கிய பிரபலங்களாக உள்ளனர். இளையராஜாவிற்கு பாவலர் வரதராஜன், ஆர்.டி. பாஸ்கர், கங்கை அமரன் ஆகிய மூன்று சகோதரர்கள் உள்ளனர். இளையராஜாவின் மூத்த அண்ணனான பாவலர் வரதராஜனுக்கு சிவன் என்ற மகன் உள்ளார். அவருக்கு வயது 60.
இளையராஜா அண்ணன் மகன்:
இவர் புதுச்சேரியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரை பாவலர் சிவன் என்றே பலரும் அழைப்பாளர்கள். தனது குடும்பத்தினரை போலவே இவரும் இசைக்கலைஞர் ஆவார். சிறந்த கிதார் இசைக்கலைஞரான இவர் இளையராஜாவின் இசைக்குழுவில் சில ஆண்டுகள் கிதார் இசைக்கலைஞராக பணியாற்றினார். கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலவர் சிவன் இன்று மரணம் அடைந்தார்.
பெரும் சோகம்:
தனது அண்ணன் மகன் மறைவால் இளையராஜாவும் அவரது குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் உள்ளனர். அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் தீனா வெளியிட்ட இரங்கல் செய்தியில், இசைஞானியின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனின் மகன் கிதார் இசைக்கலைஞர் சிவன் காலமானார் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் இசைப்பயணத்தில் மிகப்பெரிய பங்காற்றியவர் அவரது அண்ணன் பாவலர் வரதராஜன் ஆவார். பாவலர் வரதராஜன் பன்முக வித்தகராக திகழ்ந்தார். பாடலாசிரியர், எழுத்தாளர், இசைக்கலைஞர், பாடகர் என்று பன்முகம் கொண்டு திகழ்ந்ததால் அவர் பாவலர் வரதராஜன் திகழ்ந்தார் என்பதும் அவர் 1973ம் ஆண்டே காலமாகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாவலர் சிவனின் இறுதிச்சடங்கு விரைவில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த இறுதிச்சடங்கில் இளையராஜா, யுவன்சங்கர்ராஜா, கார்த்திக்ராஜா, கங்கை அமரன், வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன், பவதாரணி என இளையராஜா குடும்பத்தினர் மட்டுமின்றி பிற திரைப்பிரபலங்களும் இறுதிச்சடங்கில் பங்கேற்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, கடந்த 2020ம் ஆண்டு பாவலர் வரதராஜனின் மற்றொரு மகனாகிய பாவலர் மைந்தன் என்ற ஹோமா ஜோ உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தனது குடும்பத்தினரை போலவே கலைத்துறையில் ஆர்வம் கொண்ட அவர் இசைக்கலைஞராக அல்லாமல் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு உலா வந்தவர். கிழக்குவாசல், சின்னக்கவுண்டர், சிங்காரவேலன் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய அவர் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 2020ம் ஆண்டே காலமானார். தற்போது இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மற்றொரு மகனும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் இளையராஜா குடும்பத்திற்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: A R Rahman: ஆஸ்கர் நாயகன் ரஹ்மானுக்கு இப்படி ஒரு அவமானமா? புனே போலீசாருக்கு நெட்டிசன்கள் கண்டனம்!
மேலும் படிக்க: Watch Video: அருந்ததி அனுஷ்கா இவ்வளவு அழகா பாடுவாங்களா? இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டான வீடியோ