மகாராஷ்டிர மாநிலம், புனேவில் நடைபெற்ற இசையமைப்பாளர் ஏ,ஆர்,ரஹ்மானின் இசை நிகழ்ச்சி அம்மாநில காவல் துறையினரால் நிறுத்தப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் இச்சம்பவத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.


கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசைப்புயலாகக் கோலோச்சி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கர் வென்று ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்த்து மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். 


படங்களுக்கு இசையமைப்பது தாண்டி, தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். முன்னதாக சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய சூஃபி இசை நிகழ்ச்சிக்குக் கூட மாபெரும் ரசிகர் பட்டாளம் திரண்டு சென்று நிகழ்ச்சியைக் கண்டுகளித்தது.


அந்த வரிசையில் நேற்று முன் தினம் (ஏப்.30) புனேவில்  நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசைநிகழ்ச்சியை காவல் துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் ராஜ்பகதூர் மில்ஸ் அருகே உள்ள மைதானத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்திய நிலையில், இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.


 தனது இசையில் வெளியான பல சூப்பர் ஹிட் பாடல்களை ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது இசைக்குழுவினர் பாடிய நிலையில், 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.


ஞாயிறன்று இரவு 10 மணியைக் கடந்து நிகழ்ச்சி தொடர்ந்த நிகழ்ச்சியில், ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியின் இறுதிப்பாடலை பாடிக்கொண்டிருந்தபோது மேடையேறிய காவல் அலுவலர், “அனுமதி அளிக்கப்பட்ட நேரம் முடிவடைந்தது, உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்துங்கள்” எனக் கூறியுள்ளார்.


மேலும் உடனடியாக நிகழ்ச்சியை முடித்துக்கொள்ளாவிட்டால்  சட்டநடவடிக்கை பாயும் எனவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் காவலர் கூறிய நிலையில், நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.  


 






ஆனால் அங்கு வந்த பார்வையாளர்களும் பலரும் காவல் துறையினரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டு பின் கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து முன்னதாக புனே காவல் அதிகாரி ஸ்மார்தனா பாட்டீல் பேசுகையில், “இரவு 10 மணிக்கு மேல் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்ததால், ஏ.ஆர்.ரஹ்மானை பாடவிடாமல் புனே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். ரஹ்மான் தனது கடைசிப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்.


பாடும் போது இரவு 10 மணியைத் தாண்டிவிட்டதை அவர் உணரவில்லை, எனவே அந்த இடத்தில் இருந்த எங்கள் காவல்துறை அதிகாரி சென்று அவருக்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி பின்பற்ற வேண்டிய காலக்கெடுவைத் தெரிவித்தார். அதன் பிறகு ஏ.ஆர். ரஹ்மான் பாடுவதை நிறுத்தினார்” எனத் தெரிவித்துள்ளார்.


காவல் துறையினர் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தும் இந்த வீடியோ இணையத்தில் நேற்று தொடங்கி ட்ரெண்டான நிலையில், தற்போது ஹாஷ்டேக் பகிர்ந்து இணையவாசிகள் மகாராஷ்டிரா காவல் துறையினருக்கு கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.


#DisRespectOfARRahman எனும் ஹாஷ்டேகைப் பகிர்ந்து புனே காவல் துறையினரின் இந்த செயல் மிகவும் மோசமானது என்றும், ஆஸ்கர் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஒரு இந்தியரை புனே காவல் துறை அவமதித்துள்ளது, இப்படிப்பட்ட  பணிவான மனிதரை அவமதித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.