நேர்காணல் ஒன்றில் பிரபல நடிகை அனுஷ்கா பாட்டு பாடிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 


கடந்த 2006 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. ஆனால் அந்த படம் தோல்வியடைந்ததால் அனுஷ்காவுக்கு சரிவர வாய்ப்புகள் அமையவில்லை. தொடர்ந்து தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்த அவருக்கு, 2009 ஆம் ஆண்டு அருந்ததி படம் வெளியானது. தமிழில் டப் செய்யப்பட்ட அப்படம், மெஹா ஹிட் அடித்ததோடு மட்டுமல்லாமல், அனுஷ்கா எப்பேர்ப்பட்ட நடிகை என்பதை திரையுலகம் அறிந்தது. அதன் விளைவு தமிழிலும் பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. 


இதனைத் தொடர்ந்து விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்தார். மேலும் வானம், தெய்வத்திருமகள், தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். நடுநடுவே பஞ்சமுகி, ருத்ரமாதேவி ஆகிய சரித்திர, புராண கால கதைகள் அடங்கிய படங்களில் தன் முத்திரையை அனுஷ்கா பதித்தார். 


உலகம் போற்றிய தேவசேனா


ராணி கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமான முகம், கம்பீரம், கர்வம், அழகு என அனைத்தையும் ஒன்று சேர்த்த ஒரு உருவம் நடிகை அனுஷ்கா என்பது திரையுலகம் அறிந்தது. இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் “தேவசேனா” ஆக அசத்தியிருந்தார். எங்கு சென்றாலும் அவரை கொண்டாடினர். இப்படியான நிலையில் அனுஷ்கா சில காலம் தமிழில் படங்கள் நடிக்காமல் இருந்தார். தற்போது அவர் நடிப்பில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


இப்படியான நிலையில் நடிகை அனுஷ்கா பாடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. விஜய்யுடன் அவர் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற “என் உச்சி மண்டையிலே” பாடலை அவர் பாடி அசத்தியுள்ளார்.