‛என்னப்பா... இந்த பையனா இந்த போடு போடுறான்...’ என்று கேட்கும் தொணியில் தான் காட்சியளிப்பார் ஜி.வி.பிரகாஷ். இசை குடும்பம் என்பதால், இசை அறிந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், இளமையிலேயே அதை வெளிப்படுத்தி, அதில் வெற்றியும் பெற்றதில் தான் ஜி.வி., ஜொலிக்கிறார். இன்றோடு முழுசா 34 வயசு முடியுது.  இந்த வயதில் இன்னும் சினிமா தியேட்டர்களுக்கு சென்று கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவின் அத்தனையையும் அலசி ஆராய்ந்து விட்டார் ஜி.வி. இன்று பிறந்தநாள் காணும் ஜி.வி.,யின் வருகை , எந்த சிபாரிசும், செல்வாக்கும் இல்லாத தூற திறமையின் பலன். 




தன் பணியை தானே தீர்மானித்தவர்!


தாய்மாமா ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு இந்த நாடே அடிமை. அவரிடம் பாடம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, அதை விட எப்படி மனது வரும். ரொம்ப குட்டி பையனா இருந்த போதே பாட துவங்கிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். முதலில் அவர் பாடகர். அப்புறம் தான் இசையமைப்பாளர். ஜென்டில்மேன் படத்தில் வருமே, ‛சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு...’ பாடல், அதில் வரும் முதல் குரல், அந்த குழந்தை குரல் தான். அது ஜி.வி.,யோடது. அதுக்கு அப்புறம் மாமாவோட நிறைய படங்களில் குழந்தை குரலுக்கு வாய்ஸ் கொடுத்தாச்சு. ஒரு குழந்தைக்கு இதை விட வேறு என்ன தூண்டுகோளா அமையப்போகுது. பொதுவா குழந்தைகளோட எதிர்காலத்தை பெற்றோர் தான் தீர்மானிப்பாங்க. ஆனால் தான் ஒரு இசையமைப்பாளர் என்பதை தீர்மானித்தவர் ஜி.வி., தான். மாமாவின் பேரையும், புகழையும் அருகில் இருந்து பார்த்தவராச்சே. பாடல் கேட்கும் நமக்கே ரஹ்மானாக வேண்டும் என்று தூண்டும் போது, அவருக்கு வந்ததில் ஆச்சரியமில்லை. அப்படி தான் இசையமைப்பாளர் ஜி.வி., பிரகாஷ் உருவானார். 




தொட்டதெல்லாம் ஹிட்!


முதல் படமே பிரமாண்ட இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் வெயில். ‛வெயிலோடு விளையாடி... வெயிலோடு உறவாடி...’னு நம்மை எல்லாம் கந்தக பூமிக்கு அழைத்துச் சென்ற போது அந்த இளைஞனின் வயது வெறும் 19 என்றால் நம்ப முடிகிறதா? நம்பிதான் ஆக வேண்டும். ‛உருகுதே... மருகுதே...’ என, அனைவரையும் உருக வைத்த மாத்திரத்தில் முடிவாகிவிட்டது, இந்த பையன் ஒரு ரவுண்ட் வருவான் என்று. வெயில் படத்தில் பாடல்கள், பின்னணி என எல்லாமே முரட்டு ஹிட். பின்னணியில் பின்னி எடுக்கிறான்ப்பா என அப்போதே சிலாகித்தினர். வெயில் தாழ்வதற்குள் கிரீடம் சூட்டினார் ஜி.வி. அதுவும் தல மீது. ஆம்.... தல நடித்த கிரீடம் படத்தில் இரண்டாவது வாய்ப்பு. யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. வழக்கமான அஜித் படமாக இல்லாமல், கதையின் நாயகனாக அஜித் நடித்த வெகுசில படங்களில் அதுவும் ஒன்று. பின்னணியில் தந்தை-மகன் பாசத்தை வருடியிருப்பார். ‛அக்கம் பக்கம் யாரும் இல்லா...’ பாடலில், அப்படியே சிலிர்த்திருப்போம். ‛கனவெல்லாம்...’ பாடலில் உருகியிருப்போம். இப்படி தான், ஜி.வி.,தன் வருகையை ஸ்ட்ராங் ஆக்கினார். 




தனுஷ் 2.O ஜி.வி.பிரகாஷ்!


இசையமைக்கும் படங்களில் இசையமைப்பாளர்கள் பாடுவார்கள் என்கிற ட்ரெண்ட் ஒன்று வந்தது. அப்போது ஜி.வி.,யும் தன் படங்களில் பாடினார். திடீரென இசையமைப்பாளர்கள் படங்களை தயாரித்தனர். அவரும் தயாரிப்பாளர் ஆனார்.  பின்னர் இசையமைப்பாளர்கள் ஹீரோ ஆகும் டிரெண்ட் வந்தது. அவரும் நடித்தார். நடித்தும் வருகிறார். மற்றவர்களுக்கும் ஜி.வி.,க்கு உள்ள வித்தியாசம். சிலர் தாம் எதற்காக வந்தோம் என்பதை மறந்து, முழுநேர நடிகராக மாறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், ஜி.வி., நடிகராக இருந்தாலும், தனக்கு முகவரி இசை என்பதை உணர்ந்து, அதிலும் கவனம் செலுத்தி வருகிறார். 2008 ல் குசேலன் படத்தில் தான் முதன்முதலாக நடித்தார் , இல்லை இல்லை வந்தார். ஆம், ஜி.வி.பிரகாஷாக தான் அதில் நடித்தார். இது நல்லா இருக்கே என, அடுத்தடுத்த படங்களிலும் ஜி.பி.பிரகாஷ் கேரக்டருக்கு ஜி.வி.பிரகாஷே நடித்தார். நான் ராஜாவாகப்போகிறேன். ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை என இசையமைப்பாளர் வேடங்களில் நடித்து வந்த ஜி.வி., பின்னர் தலைவா படத்தில் ‛வாங்கண்ணா... வணக்கங்கண்ணா...’ பாடலில் விஜய் உடன் ஒரு பாட்டிற்கு குத்தாட்டம் போட்டார். இசையமைப்பாளர்கள் தங்கள் படங்களில் வரும் பாடலில் தலைகாட்ட வேண்டும் என்கிற டிரெண்ட் அப்போது இருந்தது. அதையும் ஜிவி விடவில்லை. இவ்வளவு செய்த பின் நடிச்சிடலாம் என முடிவு பண்ணி தான் டார்லிங் படத்தில் ஹீரோ ஆனார். இன்று , தனுஷ் 2.O என்கிற அடையாளத்தோடு தனக்கென தனி வழியில் நடித்து, அவற்றையும் ஹிட் ஆக்கி வருகிறார்.




படத்தில் கதை இருக்கா... அப்போ ஜி.வி., தான்!


சினிமா பெரும் பணம் புழங்கும் இடம். கடனை உடனை வாங்கி படத்தை எடுப்பார்கள். ‛சின்ன பையன்... இவனை நம்பலாமா...’ என தயாரிப்பாளர்கள் ரிஸ்க் எடுக்காமல் இருந்திருந்தால், இன்று இப்படிஒரு இசையமைப்பாளர் கிடைத்திருக்க மாட்டார். நம்பிக்கை வைத்தார்கள் என்பதை விட, நம்பிக்கையை காப்பாற்றினார் என்பது தான் சரியாக இருக்கும். இவர் வருகையின் போது, ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியில் பிஸியாக இருந்த காலகட்டம். பட்ஜெட் ஏ.ஆர்.ரஹ்மானாக அனைவரும் ஜி.வி.,யை தேடினர். ஆனால் இசையில் அவர் பட்ஜெட் வைக்காமல், பிரமாண்டமாகவே டியூன்களை தந்தார். குறுகிய காலத்திலேயே ரஜினி, அஜித், விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு, கார்த்தி, ஆர்யா என அத்தனை முன்னணி ஹீரோக்களுக்கும் இசையமைத்து ஹிட் கொடுத்தவர். ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன, அசுரன், சூறரைப்போற்று என மெலோடி வரிசைகளும், கதை கொண்ட களமும் தான் ஜி.வி.,யினுடையதாக இருந்தது. நாலு குத்து, அஞ்சு டப்பா என பாடல்களை முடிக்காமல், இசையோடு பயணிக்க வைக்கும் சூட்சமம் அறிந்தவர் ஜிவி. 




நான் கேட்பேன்... நான் தான் கேப்பேன்!


இளம் வயதில் இசை, பாடகர், நடிப்பு, தயாரிப்பு என பல பொறுப்புகள் இருந்தாலும் சமூகத்திற்கான குரல் கொடுப்பதிலும் ஜிவி தயங்கியதில்லை. நமக்கேன் வம்பு என முன்னணி சினிமா விஐபிகள் எல்லாம் அமைதி காக்கும் போது, அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் துடிப்புடன் இருந்தார். சிலர் அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன் வைக்கும் போது, அவர்களுக்கு ஆதரவாக நிற்பதிலும் தயங்கியதில்லை. சமூக வலைதளத்தில் இன்றும் ஆக்டிவாக சமூக கருத்துக்களை பரிமாறி வரும் ஜி.வி., பிரகாஷ் போன்றவர்களை இன்றைய இளைய சமுதாயம் கொண்டாடுகிறது. நன்றாக சம்பாதிக்கிறோம்... நமக்கேன் வம்பு என ஜாலி வாழ்க்கை வாழ முடியும். ஆனால், அதை கடந்து சமூக கருத்துக்களை முன் வைப்பதில் ஜிவி துணிந்தவர். 2013 ல் பாடகி சைந்தவியை திருமணம் செய்த ஜிவி., பிரகாஷ், தனது படங்களில் மனைவியுடன் டூயட் பாடுவதை இன்றும் தொடர்கிறார். இவர்களின் காம்பினேஷன் அனைத்துமே செம ஹிட். உள்ளத்திலிருந்து காதல் வரும் போது, காதல் பாடல்கள் ஹிட் ஆவதில் என்ன ஆச்சரியம். கை நிறைய படங்கள், டுவிட்டர் முழுதும் கருத்துக்கள், வீட்டில் அழகான குடும்பம் என மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஜி.வி.யின் இந்த மகிழ்ச்சி, அவரது இன்றைய பிறந்தநாளில் இன்று போல் என்றும் தொடர வாழ்த்துகிறது ABP நாடு.