வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் உள்ள நடிகர் விஷ்னு விஷால் சமீப காலமாக கதைக்கள தேர்வில் அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான “வெண்ணிலா கபடிக்குழு “, “ராட்சசன் “ போன்ற திரைப்படங்கள் இன்றளவும் மக்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்மிட்டன் வீராங்கனை ஜூவாலா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கொரோனா ஊரடங்கில் நடைபெற்ற இவர்களின் திருமண புகைப்படம் மற்றும் நடன வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து தற்பொழுது விஷ்ணு விஷால் கப்பிங் தெரபி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது
கப்பிங் தெரபி என்பது சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்று. கப் போன்ற சிறிய கண்ணாடி குவளைகளை முதுகு, கை, கால் போன்ற இடங்களில் வைத்து மது மற்றும் சில மூலிகைகள் மூலம் எரியூட்டப்பட்டு, ஒரு அழுத்தம் உண்டாக்குவதன் மூலம் வெற்றிடம் ஏற்படுத்துவதே கப்பிங் தெரபி என கூறப்படுகிறது. இந்த கப்பிங் தெரபி இரத்தத்தை சீர்ப்படுத்தி உடலின் வலிகளை குறைக்கிறது என நம்பப்படுகிறது.
பொதுவாக விளையாட்டு வீரர்கள் மற்றும் ஸ்டெண்ட் காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் ஆகியோர் இந்த சிகிச்சை எடுப்பதில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் விஷ்ணு விஷால் எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தை முடித்த நிலையில் கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தான் கப்பிங் சிகிச்சை மேற்கொண்ட லேப் குறித்த விவரங்களை பகிர்ந்துக்கொண்ட விஷ்ணு, தன் மனம் மற்றும் உடலுக்கான தகுந்த ஆலோசனை கிடைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தசை வலி, உடல் வலி போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம் எனவும் கூறுகிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் எஃப்.ஐ.ஆர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஷ்னு இஸ்லாமிய இளைஞராக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா, மோனிகா ஜான் உள்ளிட்ட மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும் கெஸ்ட் ரோலில் தலைகாட்டியுள்ளாராம். எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் கொரோனா சூழல் காரணமாக படத்தை ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுபட்டுள்ளது. குறிப்பாக டிஸ்னி பிள்ஸ் ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியாகும் என படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர துருவங்கள் பதினாறு இயக்குநரின் அடுத்த படைப்பான “நரகாசுரன் “, அருவி பட இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனின் “வாழ்” திரைப்படமும் ஓடிடி தள ரிலீஸில் இடம்பெற்றுள்ளது.