தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ள கீர்த்தி சுரேஷ் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


குழந்தை நட்சத்திரம் 


கீர்த்தி சுரேஷ் பாரம்பரியமான திரையுலக குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சுரேஷ் குமார் லையாள இயக்குநர்-தயாரிப்பாளர் ஆவார். இவரது தாய் மேனகா கீழ் வானம் சிவக்கும், நெற்றிக்கண், எங்கிருந்தாலும் வாழ்க, உனக்காகவே வாழ்கிறேன் ஆகிய தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த கீர்த்தி குழந்தை நட்சத்திரமாக தன் தந்தை தயாரித்த சில மலையாளப் படங்களில் நடித்தார்.  






அறிமுகம் செய்த பிரியதர்ஷன் 


கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ள பிரியதர்ஷன் இயக்கிய ”கீதாஞ்சலி” படத்தில் கதாநாயகியாக கீர்த்தி அறிமுகமானார். முதல் படத்திலேயே இரட்டை வேடம் என்பதால் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டார். தொடர்ந்து ரவி இயக்கத்தில் திலீப் நடித்து வெளியான ரிங் மாஸ்டர் படத்தில் பார்வையற்றவராக நடித்து ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றார். இதுவே தமிழ் சினிமா பக்கம் கீர்த்தியை கொண்டு வந்தது. 


கொண்டாடிய தமிழ் ரசிகர்கள் 


இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானாலும் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் படம் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கீர்த்தி சுரேஷூக்கு பெற்று தந்தது. மீண்டும் சிவாவுடன் ‘ரெமோ’, தனுஷூடன் “தொடரி’ ஆகிய படங்கள் அவருக்கு பாராட்டைப் பெற்று தந்தது. 2017 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘பைரவா’ படம் முன்னணி நடிகர்களின் படங்களில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கான தொடக்கமாக அமைந்தது.  இதன் பின்னர் மீண்டும் விஜய்யுடன் சர்கார், சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விஷாலுடம் சண்டக்கோழி-2, விக்ரமுடன் சாமி-2  என பல படங்களில் நடித்தார்.


நடிகையர் திலகம்






மலையாளம்,தமிழைத் தொடந்து தெலுங்கில் ராம் போதினேனி ஜோடியாக நேனு சைலஜா படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து நானியுடன் நடித்த நேனு லோக்கல் படங்கள் கீர்த்தி சுரேஷூக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இந்நிலையில் தான் 2018 ஆம் ஆண்டு நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட ‘மகாநடி’ என்ற படத்தில் சாவித்திரியாக நடித்து அசத்தினார். தமிழிலும் இப்படம் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியானது.  அனைவரையும் வியக்க வைத்த கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. 


தனி ஹீரோயின் 


பிற ஹீரோயின்களைப் போல கீர்த்தியும் சோலோ ஹீரோயின் கதைகளில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் தமிழில் பெண்குயின், சாணி காயிதம் ஆகிய படங்களும், தெலுங்கில் மிஸ் இந்தியா, குட்லக் சகி ஆகிய படங்கள் வெளியாகின. 


சூப்பர் ஸ்டார் தங்கச்சி 


கடந்தாண்டு தீபாவளிக்கு ரஜினி நடிப்பில் அண்ணாத்த படம் வெளியானது. இதில் ரஜினியின் தங்கச்சியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக தமிழ் சினிமாவின் 50 வருட கனவுப்படமான பொன்னியின் செல்வனில் அவர் நடிக்க மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மாமன்னன், சைரன் ஆகிய படங்களில் நடித்து வரும் கீர்த்திக்கு ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீர்த்தி சுரேஷ்..!