பிரபல நடிகை ஜனனி அய்யர் தனது பெயரை திருத்தம் செய்துள்ளதாகவும், இனிமேல் அப்படியே தன்னை அழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


பொதுவாக தமிழ் சினிமாவில் வேற்று மொழியில் இருந்து நடிக்க வரும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் என பலரும் தங்களது பெயர்களுக்கு பின்னால் சாதி அல்லது தான் சார்ந்த சமூகத்தின் பெயரை போட்டுக் கொள்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. உதாரணமாக லட்சுமி மேனன், நித்யா மேனன், பார்வதி மேனன், ஐஸ்வர்யா மேனன், ரகுல் ப்ரீத் சிங், பார்வதி நாயர், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரை உதாரணமாக சொல்லலாம். 


தமிழகம் திராவிட சிந்தனைகளை கொண்ட இடம் என்பதால் இவர்களை போன்றவர்கள் தங்கள் பெயரின் பின்னால் இருக்கும் சாதிய அடையாளங்களை நீக்க வேண்டும் என கோரிக்கை நீண்ட நாட்களாகவே எழுந்து வந்தது. இதனைத் தொடர்ந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெகிடி, அதே கண்கள், பாகன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமன நடிகை ஜனனி அய்யர் கடந்தாண்டு மே மாதம் 28 ஆம் தேதி சமூக வலைத்தளங்களில் “மாற்றம் ஒன்றே மாறாதது. என்றும் ஒற்றுமையுடன்” என குறிப்பிட்டு தனது பெயரை ஜனனி என மட்டுமே தெரிவித்திருந்தார். 






இதன் மூலம் தனது சாதியின் பெயரை நீக்கிய அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. பிற பிரபலங்களும் ஜனனியை பின்பற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.  அதேசமயம் தமிழ் படம் 2, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்த நடிகை ஐஸ்வர்யா மேனன் நாய்க்குட்டிக்கு  ‘Coffee Menon’ என தனது சாதிப் பெயரையும் சேர்த்தது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. 






இந்நிலையில் தெகிடி படத்திற்கு பிறகு நடிகை ஜனனி, அசோக் செல்வனுடன் அறிமுக இயக்குநர் சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில்  வேழம் என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேசிய  நடிகை ஜனனி, தமிழ் சினிமாவில் நல்ல திரைப்படங்களை ஆதரிக்க  ஆட்கள் குறைவாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் தான் தன்னுடைய பெயரில் இருந்த அய்யர் என்ற வார்த்தையை நீக்கி விட்டதாகவும், இனிமேல் தன்னை ஜனனி என்றே அனைவரும் அழைக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண