ஓஎன்ஜிசியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் விளைநிலங்களில் குழாய் பதித்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், ஓஎன்ஜிசி நிறுவனத்தின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தற்காலிக ஊழியர்களாக கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வரும் ஊழியர்கள் பல ஆண்டுகளாக தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




மேலும் இன்று திருவாரூர் அருகே வெள்ளகுடி ஓஎன்ஜிசி அலுவலகம் முன்பாக சிஐடியு மாவட்ட செயலாளர் முருகையன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஓஎன்ஜிசியில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் கருணைத் தொகை வழங்க வேண்டும், நிலுவையிலுள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்கள் பணி ஓய்வு பெறும்பொழுது இழப்பீடு வழங்க வேண்டும்.




கொரோனா காலத்தில் உயிரிழந்த ஊழியர்களுக்கு ஓஎன்ஜிசி நிர்வாகம் தகுந்த இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை. உடனடியாக ஓஎன்ஜிசி நிறுவனம் உயிரிழந்த ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பணியில் இருக்கும் போது இறந்த ஊழியர்களுக்கு ஓஎன்ஜிசி நிர்வாகம் இழப்பீடு வழங்கவேண்டும் வேலை இழந்த தொழிலாளர்களுக்கும் உடனடியாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒப்பந்தப்படி ஜெனரேட்டர் ஆபரேட்டர்களுக்கு பேசிய ஊதியத்தை வழங்க வேண்டும், ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்புமின்றி ஓஎன்ஜிசி நிர்வாகம் அவ்வப்போது பணியில் இருந்து நீக்கம் செய்து வருகிறது. இந்தப் போக்கை உடனடியாக ஓஎன்ஜிசி நிர்வாகம் கைவிட வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக ஊழியர்களை உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் சிஐடியு பெட்ரோல் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் மாநில செயலாளர் விஜயன், சிஐடியு மாவட்ட தலைவர் மாலதி, மாவட்ட பொருளாளர் வைத்தியநாதன், மாவட்ட துணை செயலாளர் அனிபா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண