திரைப்பட கல்லூரியில் பயின்றபோது நடிகர் ரஜினிகாந்த் எப்படி இருந்தார் என்பது குறித்து பிரபல நடிகை ஹேமா சௌத்ரி நேர்காணல் ஒன்றில் தெரிவித்த பழைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார். கிட்டதட்ட 48 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் அவருக்கு உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ரஜினி என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது ஸ்டைல் மேனரிசங்கள் தான். சிகரெட்டை தூக்கி போட்டி வாயில் பிடிப்பது, வசனங்கள் உச்சரிப்பு உள்ளிட்ட அனைத்திலும் தனக்கென ஸ்டைலை பின்பற்றியதால் 72 வயதிலும் நம்பர் 1 நடிகராக உள்ளார். 


ரஜினி தனது ஆரம்ப காலக்கட்டத்தில் பெங்களூருவில் உள்ள அரசு போக்குவரத்து கழக்கத்தில் நடத்துனராக பணியாற்றியது நம் அனைவரும் அறிந்ததே. இப்படியான நிலையில் பிரபல நடிகை ஹேமா சௌத்ரி ரஜினி பற்றி ஒரு நேர்காணலில் பல விஷயங்களை தெரிவித்திருந்தார். ரஜினியின் உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட்.  அப்படிப்பட்ட சிவாஜி ராவை பார்த்தவர்களில் ஹேமா சௌத்ரியும் ஒருவர். 


அந்த நேர்காணலில், “ரஜினி எப்பவுமே தனிமை விரும்பி. திரைப்பட கல்லூரியில் அவர் என் சக மாணவர் என்றாலும் வயதில் மூத்தவர். ரஜினியே சினிமாவில் இப்படி ஒரு நிலையில் இருப்போம் என நினைத்து பார்த்திருக்க மாட்டார். தனக்குன்னு ஒரு பாணியை வைத்துக் கொண்ட அவரை பார்க்கும்போது நமக்கு ஒரு மதிப்பு தான் வரும். அன்றைக்கு இருந்த ரஜினியிடம் பணம், புகழ் என எதுவும் இல்லை. அந்த வயதிலும் கூட  கல்லூரியில் இருக்கும் நேரங்களை வைத்து சொல்கிறேன். ரஜினி ரொம்ப பண்பானவர், பெண்களுக்கு அதிக மரியாதை கொடுப்பார். யாரிடமும் சீக்கிரமே பழக மாட்டார். 


ரஜினி அந்த காலக்கட்டத்தில் உள்ளுக்குள் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஏதாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார்.   25 வயதில் இளமைக்கான எண்ணங்கள் எதுவும் இல்லாமல் வித்தியாசமாக இருப்பார். திரைப்பட கல்லூரியில் எங்களுக்கு ஒரு பயிற்சி கொடுக்கப்பட்டிருந்தது. மொத்தமிருந்த 36 பேரில் எங்க அம்மா ரஜினியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். 


அவரை அழைத்து உங்க பேரு என கேட்டார். அன்றைக்கு ரஜினியின் பெயர் ‘சிவாஜிராவ்’ என்பதால், அதனை சொன்னார். மாபெரும் நடிகனின் பெயரை வைத்திருக்கிறாய். பெரிய உயரத்தை தொடுவாய் என அம்மா வாழ்த்தியதும் உடனே ரஜினி காலில் விழுந்து வணங்கினார். நான் அம்மாவிடன் என்னை விட்டு விட்டு அவரை பாராட்டியது பற்றி கேட்டேன். ஆனால் உங்கள் எல்லோரையும் விட ரஜினி பண்ணது சிறப்பாக இருந்தது என சொன்னார்” என ஹேமா சௌத்ரி அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.