தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் பாலையாவின் பேரன் வீட்டில், நிச்சல் குளத்தில் முதலை இருந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 


பொதுவாகவே மழைக்காலங்களில் புழு, பூச்சி ஆகியவற்றோடு விஷ பிராணிகளின் நடமாட்டமும் பொதுவெளியில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே மழைக்காலங்களில் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். அதனை உணர்த்தும் விதமாக தான் சென்னை அருகே நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாலையா பேரன்:


சென்னை அடுத்த தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பழம்பெரும் நடிகர் பாலையாவின் பேரனும் தொழிலதிபருமான பாலாஜி தங்கவேல் நெடுங்குன்றம் பகுதியில் வசித்து வருகிறார். 48 வயதான அவர் தனது மனைவி மற்றும்  2 வயது மகனுடன் தனது சொகுசு வீட்டில் வசித்து வருகிறார்.  அரசியலிலும் ஆர்வம் கொண்ட இவர் பாரதிய ஜனதா கட்சியில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.






நீச்சல் குளத்தில் முதலை:


இந்த சூழலில் தனது வீட்டு நீச்சல் குளத்தில் இருந்த நீரை பாலாஜி தங்கவேல் வெளியேற்றியுள்ளார். அப்போது, நீரில் ஏதோ நீந்திச் செல்வது போன்று இருப்பதை கண்டுள்ளார். உடனடியாக அருகே சென்று பார்த்தபோது, அங்கு சுமார் ஒன்றரை அடி நீள முதலை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் சுதாரித்துக் கொண்ட பாலாஜி தங்கவேல், உடனடியாக லாவகமாக செயல்பட்டு நீரில் இருந்த முதலை குட்டியை பிடித்து ஒரு பெட்டியில் போட்டுள்ளார். 


உயிரியல் பூங்காவில் ஒப்படைப்பு:


வீட்டு நீச்சல் குளத்தில் முதலை குட்டி இருந்தது தொடர்பாக வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அதிகாரிகளுக்கு பாலாஜி தங்கவேல் தகவல் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அங்கு வந்த  பூங்கா ஊழியர்கள் முதலைக்குட்டியை மீட்டு பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.


முதலை எப்படி வந்தது?


குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு நீச்சல் குளத்திற்கு முதலை குட்டி எப்படி வந்து இருக்கும் என பூங்கா ஊழியர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு,  வண்டலூர் பூங்காவில் உள்ள முதலை குட்டிகளை உணவுக்காக கழுகு போன்ற பறவைகள் தூக்கி செல்லும்போது, அதன் பிடியில் இருந்து தவறிய ஒரு முதலை குட்டி நீச்சல் குளத்தில் விழுந்திருக்கலாம் என ஊழியர்கள் விளக்கமளித்துள்ளனர். பழம்பெரும் நடிகர் பாலையா பேரன் வீட்டு நீச்சல் குளத்தில் முதலை மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.