1986ம் ஆண்டு வெளிவந்த ’மைதிலி என்னை காதலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 80 கிட்ஸ்களின் பேவரைட் நடிகையாக இருந்த அமலா இன்று 56வது பிறந்த நாள் கொண்டாடுகிறார் .


ஐதரபாத்தை பூர்வீகமாக கொண்ட அமலா திரையுலகில் 6 ஆண்டுகளே நடித்திருந்தாலும், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ஒரு நடிகையாகவே மாறியுள்ளார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை  பறிகொடுக்கும் அளவுக்கு அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் அமலா பால். 80களில் காதல் படங்களை எடுத்து ஹிட் கொடுத்து வந்த டி.ராஜேந்தர், நடனத்தை மையப்படுத்திய ஒரு காதல் கதையை படமாக எடுக்க முடிவு செய்துள்ளார். அதற்கு நன்றாக பரதநாட்டியம் தெரிந்த ஹீரோயின் வேண்டும் என்பதால் அப்படிப்பட்ட நாட்டிய பெண்ணை தேடியுள்ளார். 


அப்பொழுது தான் அமலா குறித்து டி.ராஜேந்திரனுக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக தனது படத்தில் நடிக்க வைக்க அமலாவை டி.ராஜேந்தர் அணுகியுள்ளார். ஆனால், சினிமாவில் தனது மகள் நடிக்க மாட்டாள் என அமலாவின் அம்மா கூறியுள்ளார். படத்தில் அமலாவை தான் நடிக்க வைக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்த டி.ராஜேந்திரன் தனது மனைவி உஷாவை அமலாவின் வீட்டிற்கு அழைத்து சென்று அவரை பேச வைத்து படத்தில் நடிக்க ஓகே சொல்ல வைத்துள்ளார். 


அப்படி அமலா நடித்த முதல் படம் தான் ‘மைதிலி என்னை காதலி’. டி.ராஜேந்தர் இயக்கி அவரே நடித்திருக்கும் இந்த படத்தில் அமலாவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அமைதியான முகம், மவுன சிரிப்பு, அழகான கண்கள், நாட்டியத்தில் தேவதை என ஒட்டு மொத்தமாக ஸ்கோர் செய்திருந்த அமலாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன. அதே ஆண்டு பாடல்களில் ஹிட் அடித்த மோகன், ராதா நடித்த மெல்ல திறந்தது கதவு அமலாவின் கேரியரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. நூர்ஜஹானாக வந்து முகத்தை காட்டாமல் கண்களின் காதலை வெளிப்படுத்திய அமலா 80 கிட்ஸ்களின் கனவு ஹீரோயினாக வலம் வந்தார். 


அடுத்ததாக விஜயகாந்துடன் இணைந்து ஒரு இனிய உதயம், ரஜினியுடன் வேலைக்காரன், பாரதி ராஜாவின் வேதம் புதிது, இது ஒரு தொடர்கதை, கூட்டுப்புழுக்கள், பேசும் படம் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி  நடிகையாக மாறினார். ரஜினி, விஜயகாந்த், கமல், மோகன் என உச்சக்கட்ட ஹீரோக்களுடன் நடித்த அமலா படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தன. தொடந்து கொடி பறக்குது, வெற்றி விழா, மாப்பிள்ளை படங்களில் நடித்து வந்த அமலா, 1992ம் ஆண்டு நாகார்ஜூனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 


1991ம் ஆண்டு நாகார்ஜூனாவுடன் நிர்ணயம் என்ற படத்தில் இணைந்து நடித்த அமலா அவரை காதலிக்க ஆரம்பித்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்து கொண்ட அமலா முழுநேரமும் குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2012ம் ஆண்டு வெளி வந்த லைஃப் இஸ் பியூட்டிஃபுள் தெலுங்கு படத்தின் மூலம் மீண்டும் திரையில் நடித்தார். ஒருசில இந்தி படங்களில் நடித்த அமலா, மலையாள படங்களிலும் தலைக்காட்டினார். 2022ம் ஆண்டு தமிழி கணம் என்ற பெயரில் வெளிவந்த படத்திலும் நடித்துள்ளார்.


சில ஆண்டுகளே விரல் விட்டு எண்ணும் படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்களின் மனதில் தனக்கு என நீங்காத இடம் பிடித்த அமலாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்