ரஜினிகாந்த் பவுண்டேஷன்' என்ற பெயரில் ஏற்கனவே அறக்கட்டளை ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், போலியாக ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் கணக்குத் தொடங்கி பண மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


ரஜினிகாந்த் பவுண்டேஷனின் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் கொடுத்துள்ள புகாரில், 'ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் ஏழை மக்களுக்கு உதவி செய்து வரும் நிலையில், ஃபேஸ்புக்கில் போலியாக கணக்கு ஒன்றைத் தொடங்கி 200-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் பரிசு தரப்படும் என்றும் ஏமாற்றப்பட்டுள்ளது. இது நடிகர் ரஜினிகாந்தின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையும் இந்தப் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது. 


முன்னதாக கடந்த ஆண்டு, ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களின் பட வெளிநாட்டு பதிப்புரிமை தருவதாக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ரூ.15 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதியப்பட்டது. 


மலேசியாவை சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்கிற நிறுவனம் தமிழ் திரைப்படங்களை முறைப்படி உரிமம் பெற்று வெளிநாடுகளில் வெளியிடும் தொழில் செய்து வருகிறது. கபாலி போன்ற பல படங்களை இந்த நிறுவனம் வெளியிட்டது. இந்நிலையில்  தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி, அந்த நிறுவனத்தை அணுகி ரஜினியின் பேட்ட, தனுஷின் நான் ருத்ரன், ராகவா லாரன்சின் காஞ்சனா-3 போன்ற படங்களின் பதிப்புரிமை தங்களிடம் இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.  இதற்காக  30 கோடி வரை பணம் கைமாறியதாக  கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் அவரிடம் பேட்ட படத்தின் பதிப்புரிமை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆகையால் அந்த நிறுவனம் அதுகுறித்து கேட்டபோது, முரளி, 15 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்து சமாளித்ததாக கூறப்படுகிறது. 


அதன் பின்னர் காஞ்சனா-3 மற்றும் நான் ருத்ரன் ஆகிய படங்களின் பதிப்புரிமையும் அவரிடம் இல்லை என்பதும் தங்களை  ஏமாற்றி பணம் பெற்றிருக்கிறார் என்பதும் சம்பந்தப்பட்ட மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து முரளி ராமசாமியிடம் கேட்ட போது, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை திருப்பி தர முடியாது என அலட்சியமாக பதிலளித்துடன் மிரட்ட்ல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி மீது ,மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன், காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இந்த புகாரின் பேரில்  அவர் மீது  மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.