நடிகர் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள 'பாச்சுவும் அத்புத விளக்கும்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.


மலையாளத்தில் ‘மலையான் குஞ்சு’ படத்துக்குப் பிறகு நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பாச்சுவும் அத்புத விளக்கும்’.


புதுமுக இயக்குநர் அகில் சத்யன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கோலிவுட்டில் குறும்படங்கள், கௌதம் மேனன் இயக்கிய ‘குயின்’ சீரிஸ் ஆகியவற்றில் நடித்து கவனமீர்த்த நடிகை அஞ்சனா ஜெயப்பிரகாஷ் நடித்துள்ளார். மேலும், விஜி வெங்கடேஷ், த்வனி ராஜேஷ், வினீத், சாந்தி கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்பிருந்தே நல்ல வரவேற்பைப் பெற்றன.


 



இந்நிலையில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளியது. குறிப்பாக நடிகர் ஃபஹத் ஃபாசிலின் நடிப்பு வழக்கம்போல் பாராட்டுகளைப் பெற்றது.


170 நிமிடங்களைக் கொண்டிருந்தாலும் நல்ல ஃபீல் குட் திரைப்படம் எனப் பாராட்டுகளைப் பெற்றது. மேலும், லைலா கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்த விஜி வெங்கடேஷ் கவனமீர்த்து சினிமா ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் அள்ளினார். மேலும் 10 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 15 கோடிகளை வசூலித்தது.


இந்நிலையில், வரும் மே.26ஆம் தேதி ஃபஹத் ஃபாசிலின் பாச்சுவும் அத்புத விளக்கும் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இது குறித்து நடிகர் ஃபஹத் ஃபாசில் முன்னதாக தன் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். 


முன்னதாக தமிழில் ஃபஹத் நடித்த விக்ரம் திரைப்படம் அவருக்கென தமிழில் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்த நிலையில், அவரது நேரடி மலையாளப் படங்களும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தப் படமும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


ஃபஹத் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் படம் தமிழில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் எனப் பலரும் நடித்துள்ளனர். வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இதேபோல் தெலுங்கு, தமிழ் என பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள புஷ்பா 2 படத்தில் ஃபஹத் நடித்துள்ள நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறியுள்ளன. அல்லு அர்ஜூன் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஃபஹத் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ள நிலையில், முன்னதாக தன் ஷூட்டிங்கை ஃபஹத் நிறைவு செய்ததாகவும் வெளியாகியுள்ளன.