விக்ரம் திரைப்படத்தில் தன்னை ஏன் நடிக்க வைத்தீர்கள் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் நடிகர் ஃபஹத் பாசில் கேட்க அதற்கு அவர் சுவாரஸ்யமான பதிலை அளித்திருக்கிறார்.
லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என பெரிய பட்டாளமே நடித்துள்ள மல்டி வெர்ஸ் வகையறா படம் தான் விக்ரம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் வெற்றியை அங்கீகரித்து, லோகேஷ் கனகராஜூக்கு புதிய ஆடி காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஒன்றையும் கமல்ஹாசன் பரிசாக அளித்தார். திரையரங்குகளைத் தொடர்ந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூலை 8ம் தேதி வெளியானது. ஓடிடியிலும் விக்ரம் படம் சக்கைப்போடு போட்டது.
விக்ரம் பட வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் எங்கோ சென்றுவிட்டது. ஏற்கெனவே மாஸ்டரில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்த விஜய், இப்போது வம்சி படத்தை முடித்துவிட்டு மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணையவிருக்கிறார்.
இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து திரையிடும் திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
இந்தப் படத்தில் ஃபஹத் பாசில் மிகவும் அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் அவர் கதாபாத்திரத்தின் பெயர் அமர். அமர் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். அந்த கதாபாத்திரத்தில் அவர் காட்டிய நேர்த்தியால் அவருக்கு மிகப்பெரிய தமிழ் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியின் போது ஃபோன் லைனில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எடுக்கப்படுகிறார். லோகேஷிடம் ஃபஹத் பாசில் என்னை ஏன் விக்ரம் படத்தில் நடிக்க வைத்தீர்கள் எனக் கேட்கிறார். அதற்கு லோகேஷ் கனகராஜ், நாங்கள் உங்களை நேசிக்கிறோம். அதனால் நடிக்க வைத்தோம் எனக் கூறுகிறார்.
முன்னதாக லோகேஷ் விக்ரம் படம் பார்த்துவிட்டீர்கள் எனக் கேட்கிறார். அதற்கு ஃபஹத் பாசில் உங்களுடன் ரிலீஸுக்கு முன்னர் பார்த்ததுதான், விரைவில் சென்னை வந்து உங்களுடன் திரையரங்கில் பார்ப்பேன் எனக் கூறுகிறார். கடைசியாக தொகுப்பாளர் லோகேஷிடம் மீண்டும் எப்போது ஃபஹத்தை வைத்து படம் எடுப்பீர்கள் எனக் கேட்கிறார். அதற்கு லோகேஷ் ஃபஹத்தைப் பார்த்து விரைவில் நாம் அனைவரும் சேர்வோம் என்று கூறுகிறார். இது விக்ரம் 2வுக்கான ஹின்ட் என்றும் சொல்லப்படுகிறது.
ஃபஹத் ஃபாசில் கடந்த 2002 ஆம் ஆண்டு அவரது தந்தை ஃபாசில் இயக்கிய கையெத்தும் தூரத்து எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். இன்று அவர் அடைந்திருக்கும் உயரம் மிகவும் பிரம்மாண்டமானது.