2020ஆம் ஆண்டு திரையரங்கம் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியான 30 மொழிகளைச் சேர்ந்த சுமார் 305 திரைப்படங்கள் 68ஆவது தேசிய விருக்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டன.
இந்த 305 படங்களில் சிறந்த படமாக ’சூரரைப் போற்று’ படம் தேர்வாகி சாதனை படைத்துள்ளது.
ட்ரெண்ட் செய்த சூர்யா ரசிகர்கள்
தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாள்களாகவே சூர்யா ரசிகர்கள் சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்களுக்கு விருதுகள் கிடைக்கும் என சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில் அவர்களது எதிர்பார்ப்புகளை நனவாக்கும் வகையில், சூரரைப் போற்று படம் சிறந்த நடிகர் - சூர்யா, சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி, சிறந்த படம், சிறந்த பின்னணி - ஜி.வி.பிரகாஷ். சிறந்த திரைக்கதை - சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் என ஐந்து பிரிவுகளில் விருதுகளை தட்டித் தூக்கியுள்ளது.
ஓடிடி ரிலீஸூக்கு கடும் எதிர்ப்பு
2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் மத்தியில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான முதல் மாஸ் ஹீரோ படமான ’சூரரைப் போற்று’ படத்துக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
எனினும் இப்படம் வெளியாவதற்கு முன்பே 100 கோடி ரூபாய்க்கும் மேல் ப்ரீ பிஸ்னஸ் செய்து 100 கோடி கிளப்பில் இணைந்தது. தொடர்ந்து சூரரைப் போற்று படத்தின் வெற்றி, அதனைத் தொடர்ந்து ஓடிடி தளங்களில் வெளியான அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் அடங்கி மட்டுப்பட்டன.
திரையரங்க ரிலீஸ்
முன்னதாக இப்படம் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மதுரை சம்மட்டிபுரத்திலுள்ள மிட்லாண்ட் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
மேலும், நாளை (ஜூலை.22) நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல எதிர்ப்புகளை சந்தித்து பெரும் வெற்றிபெற்று தமிழ் சினிமா போக்கில் குறிப்பாக ஓடிடி தள ரிலீசில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய சூரரைப் போற்று படம் விருதுகளை வாரிக் குவித்துள்ளதை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.