இயக்குனர் பார்த்திபன் இயக்கி, நடித்திருக்கும் இரவின் நிழல் திரைப்படத்தின் ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு காட்சி, சென்னை பிரசாத் லேப்பில் திரையிடப்பட்டது. படம் முடிந்த பின், படத்தில் பணியாற்றியவர்களை அறிமுகம் செய்து, பெருமை சேர்த்த பார்த்திபன், தனது நலம் விரும்பியான, பிரபல பேஸ்புக் பிரபலம் டாக்டர் ஆஷா லெனின் ஒரு அறிவிப்பை வெளியிடப் போவதாக தெரிவித்தார். பார்த்திபன் பேசியது இதோ...




‛‛எனக்கு சொந்த வீடு இல்லை என்று எப்போதோ கூறியிருந்திருக்கிறேன். வாட்ஸ்ஆப்பில் 6  போட்டோக்கள் அனுப்பினார்கள். முகப்பேரில் எனக்கு வீடுகள் உள்ளது, அதில் எதையாவது எடுத்துக் கொள்ளுங்கள். அப்படியில்லையென்றால், 2 கிரவுண்ட் இடம் வாங்கியிருப்பதாக கூறியிருந்தீர்கள், அதில் நான் வீடு கட்டித் தருகிறேன் என்று ஆஷா கூறினார். ‛அதெல்லாம் வேண்டாம்மா... உங்க பெரிய மனசிற்கு ரொம்ப நன்றினு’ நான் அவங்களிடம் சொன்னேன். அவங்க இங்கே வந்திருக்காங்க. மூன்றரை பவுன் நெக்ளஸ் ஒன்று சமீபத்தில் வாங்கியிருக்கிறார். அந்த நெக்ளஸை, இரவின் நிழல் முதல் காட்சியை பார்த்து, யார் நல்ல விமர்சனம் தருகிறார்களே அவர்களுக்கு அதை பரிசாக தருகிறேன் என கையில் எடுத்து வந்திருக்கிறார். அதை உங்கள் முன் அறிவிக்க விரும்புகிறார்,’’ 


என்று கூறி, ஆஷா லெனினை மேடைக்கு அழைத்தார் பார்த்திபன். அப்போது ஆஷா பேசியது இதோ:




‛‛நாங்கள் மதுரையில் பேட்மிட்டன் மைதானம் ஒன்று திறந்தோம். அதற்கு பார்த்திபன் அண்ணா வந்தால், நன்றாக இருக்கும் என நினைத்தோம். 3 ஆண்டுகளுக்கு முன், அதற்காக அவரை அழைத்தேன். உடனே வருகிறேன் என்றார். பொதுவாக செலிபிரிட்டிகளை அழைக்கும் போது, அவர்கள் பணம் பற்றி பேசுவார்கள். ஆனால், பார்த்திபன் அண்ணன், அதைப்பற்றி என்னிடம் பேசவே இல்லை. அந்த கொரோனா சமயத்தில் எஸ்.பி.பி., சார் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தார். அதனால் எனக்கு பயம் வந்தது; அதனால் அண்ணனை நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டேன். ஒரு வீடியோ மட்டும் அனுப்புங்கள் என்று கோரிக்கை வைத்தேன். சில நிமிடங்களில் அவரது உதவியாளர் எனக்கு போன் செய்து, எந்த மாதிரி வீடியோ வேண்டும், எந்த பொருளில் வேண்டும் என்று கேட்டார். செவித்திறன் குறைவுடைய பெண் ஒருவர் அதில் விளையாடினார்; அவரை ஊக்கப்படுத்தி வீடியோ அனுப்புங்கள் என்றேன். அண்ணனும் அதை ரெக்கார்டு செய்து அனுப்பினார். 


இந்த பெண், ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசு 75 லட்சம் ரூபாயும், பிரதமர் மோடி 75 லட்சம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளார். வாய் பேச முடியாத, காது கேட்காத அந்த பெண்ணை அண்ணன் தான் ஊக்கப்படுத்தினார். இந்த படத்தை பார்க்கும் போது, அவர்களின் உழைப்பை பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது. இப்படிப்பட்டவருக்கு வீடு இல்லை என்று கூறியதால் தான், எனது வீட்டை தர முடிவு செய்தோம். அவர் நினைத்திருந்தால், நிகழ்ச்சிக்கு நாங்கள் அழைத்த போது கட்டணம் கேட்டிருக்கலாம். ஆனால், அவர் அதைப்பற்றி பேசவே இல்லை. 


இரவின் நிழல் படத்தில் பல நிகழ்கால நிகழ்வுகளை அண்ணன் காண்பித்திருக்கிறார். நான் ரொம்ப ரசித்து இந்த படத்தை பார்த்தேன். என்னை பேஸ்புக்கில் 5 லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள். எனது நகை, அனைவருக்கும் பிரபலம். என் நகைகளை நான் பார்த்து பார்த்து வாங்குவேன். அந்த வகையில் இந்த நகையும் எல்லோருக்கு பிடிக்கும். இந்த அழகான நகை, மலபாரில் வாங்கியது. இரவின் நிழல் படத்தை பார்த்து யாராவது ஒரு அம்மா சரியான விமர்சனம் செய்ய வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு அம்மாவும் இந்த படத்தை பார்க்க வேண்டும். ஆண்களுக்கு இது பரிட்சையமான படமாக இருக்கலாம். ஆனால், பெண்களுக்கு இந்த படம் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். எனவே அவர்கள் பார்த்து விமர்சனம் செய்தால்,நான் வாங்கியுள்ள 3.5 பவுன் தங்க நகை பரிசை அவர்களுக்கு வழங்குவேன்,’’ என்று ஆஷா லெனின் பேசினார்.