தஞ்சாவூர் மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக ’ஒரு நாள், ஒரு நுால் வாசிப்பு இயக்கம்’ தொடங்கப்பட்டது.

உலகின் பெரிய தலைவர்கள், மாமேதைகள், ஆளுமை மிக்க நிர்வாகிகள் வாழ்க்கை வரலாற்றை படித்த போது அவர்கள் அனைவருக்குள்ளும் ஒரு ஒற்றுமை இருந்தது “புத்தகம் வாசிக்கும் பழக்கம்”  தான் அது. “நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று தமிழ் மூதாட்டி ஒளவையார் கூறியது அனைவருக்கும் ஏற்ற உண்மைதானே. இன்றைய நல்ல வாசகன்தான் நாளை நல்ல தலைவன் ஆக முடியும் என்பதை பல தலைவர்களும் நிரூபித்துள்ளனர்.

இன்றைய நாளில் நூல்கள் வாசிப்பு என்பது மிகவும் குறைந்துவிட்டது. நமது ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக்கிக் கொண்டு அறிவை மேம்படுத்திக் கொள்ள நூல்களே மிகச் சிறந்த கருவியாக உள்ளன. ஒருவர் பயிலும் சிறந்த நூல்களே அவர்களின் வாழ்க்கையை உருவாக்குகிறது. இன்றைய உலகில் உங்களை வெற்றியாளர்களாக ஆக்கிக் கொள்ள சிறந்த வழி புத்தகங்கள் வாசிப்பதே. மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது நம்மைச் சரியான வழியில் நடக்கவும், நம்மிடமுள்ள குறைகளை போக்கி நம்மை முழுமையாக்கி கொள்ளவும் உதவும். இன்றைய காலக்கட்டத்தில மாணவர்கள் மத்தியில் நூல் வாசிப்பது என்பதே இல்லாத ஒன்றாக உள்ளது. காரணம் மொபைல் போன்கள்தான். அதிலும் நூல் வாசிக்கலாம்.


ஆனால் மாணவர்கள் மொபைல் போனில் விளையாட்டுக்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். இது அவர்களின் மனநிலையை பாதிப்புக்கு உள்ளாக்கும். இதிலிருந்து மாணவர்களை மீட்க நூல் வாசிப்பு என்பது மிக அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும், மாணவர்களின் அறிவு திறனை மேம்படுத்த வேண்டும், மாணவ பருவத்திலேயே இலக்கியம், அறிவியல், வரலாறு சார்ந்த நூல்களை எளிதில் வாசித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என ஒரு நாள், ஒரு நுால் – வாசிப்பு இயக்கம் என்ற நிகழ்ச்சி நேற்று துவங்கியது.




இந்த நிகழ்ச்சி நேற்று முதல் வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. நிகழ்ச்சியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து புத்தகங்கள் வாசித்தார். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேல், நேர்முக உதவியாளரான மேல்நிலை பழனிவேலு, இடைநிலை மாதவன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.

இதில் மாணவர்கள் அறிவியல்,வரலாறு, இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் வாசித்தனர். பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:  தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 729 பள்ளிகளில், சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்த புத்தக வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்று ஒரு வார காலம் வாசிக்க உள்ளனர்.

ஒரு மணி நேரம் வாசித்தல் முடிந்த உடன் மாணவர்களுக்கு அதில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இதன் அவர்களின் அறிவு திறனை மேம்படுத்தவும், வாசிப்பு திறனை அதிகப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண