தஞ்சை மாவட்ட போலீசாருக்கு திங்கட்கிழமை என்றாலே செம டென்ஷன்தான். காரணம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வருபவர்களில் யாராவது ஒருவர் ஏடாகூடமாக எதையாவது செய்து அலப்பறையை கிளப்பி விடுகின்றனர். இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு அன்று முழுவதும் தலைவலிதான். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்தது.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணை எடுத்து தன் மீது ஊற்றிக் கொள்ள ஒரு பெண் முயற்சி செய்தார். இதை பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் பார்த்துவிட்டு பதறி போய் ஓடி வந்து அந்த பெண்ணிடம் இருந்து அந்த கேனை பறித்து முயற்சியை முறியடித்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை வழக்கம்போல் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த மக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து மனு அளித்தனர்.
அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்த ஒரு பெண் திடீரென்று தான் வைத்திருந்த பையில் இருந்து ஒரு கேனை எடுத்தார். அதில் மண்ணெண்ணை இருந்தது. கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பிற்காக இருந்த போலீசார் இதை கவனித்து விட்டனர். உடன் அந்த பெண்ணை சுற்றி வளைத்த பெண் போலீசார் சட்டென்று மண்ணெண்ணை இருந்த பாட்டிலை பறிக்க வந்தனர். அந்த பெண்ணும் விடாமல் இழுக்க முயற்சி செய்ய கடைசியில் போலீசார் ஒருவழியாக அந்த பாட்டிலை பறித்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸ் ஸ்டேஷனுக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த பெண் தஞ்சை மாவட்டம் பொய்யுண்டார் கோட்டை ஆற்றங்கரைப்பட்டியை சேர்ந்த லதா (38) என்பது தெரியவந்தது. இவரது கணவர் செல்வராஜ் இறந்து விட்டார். இதனால் இவருக்கு கணவர் வீட்டார் சொத்து குறித்து பிரச்னை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் லதாவுக்கும், இவரது கணவரின் சகோதரர் சிவா, மற்றொரு சகோதரரின் மனைவி மற்றொரு லதா ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்னை குறித்து தகராறு எழுந்துள்ளது. இதில் செல்வராஜின் மனைவி லதா வீட்டிற்கு செல்ல வழிபாதை இல்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மனு கொடுக்க வந்தவர் மனமுடைந்து இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் லதாவுக்கு அறிவுரைகள் வழங்கி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க செய்து அனுப்பி வைத்து பெருமூச்சு விட்டனர். போலீசார் என்றாலே கடுமையானவர்கள் என்று நினைத்த பொதுமக்களுக்கு அவர்கள் படும்பாட்டை நேரில் பார்த்ததால் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்