ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று வெளியானது. விஜய் ரசிகர்கள் பெரும்பான்மையானோருக்கு படம் பிடித்திருந்தாலும், படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன. படத்தில் எப்படி விஜய் பேசியிருக்கும் அரசியல் வசனங்கள் பேசு பொருளாகி இருக்கிறதோ, அதே போல விஜய் பேசும் “நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டேன்னா, என் பேச்சை நானே கேட்கமாட்டேன்” என்ற வசனமும் கவனம் பெற்றிருக்கிறது.
இந்த வசனத்தை முன்னதாக ‘’போக்கிரி படத்தில் பேசிய விஜய் தான் நிஜ வாழ்கையிலும் இப்படித்தான் முடிவெடுப்பதாகவும் பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் விஜய் இப்படியான முறையில் முடிவு எடுப்பது சரியானதுதானா, சாமானியன் வாழ்க்கையில் இது சாத்தியமாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் இது குறித்து சில மனநல மருத்துவர்களிடம் பேசினேன்.
இது குறித்து மனநல மருத்துவர் ராமானுஜம் கூறும் போது, “ நிச்சயம் அது போன்று முடிவு எடுக்கும் முறை தவறானது. நாம் சில நேரங்களில் அவசரகாலங்களில் சில முடிவுகளை எடுப்போம். இது போன்ற முடிவுகள் பல நேரங்களில் தவறாகவே இருக்கும். தேவையான தகவல்களை சேகரித்து, நன்றாக ஆராய்ந்து எடுக்கும் முடிவுகளே சரியானதாக இருக்கும். அதே போல முடிவை எடுத்துவிட்டு, அதிலேயே நீடிப்பதும் கடினம். காரணம் நாம் எடுத்த அந்த முடிவு எதிர்பார்த்த விளைவுகளை தராதபட்சத்தில், அதை நாம் மாற்றித்தான் ஆகவேண்டும். வளைந்து கொடுத்துதான் ஆக வேண்டும்.
இங்கு விடாமுயற்சி என்பது வேறு புத்திசாலித்தனமாக முடிவெடுப்பது என்பது வேறு என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். நாம் ஒரு இலக்கை நிர்ணயிக்கிறோம். அதில் விடாமுயற்சியோடு செயலாற்றுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அதில் நமக்கு மீண்டும் மீண்டும் தோல்வியே கிடைக்கும் பட்சத்தில், அதிலிருந்து புத்திசாலித்தனமாக ஒதுங்கி கொள்ளுதலே நலம். ஏதோ எமோஷனல் தருணங்களில் எடுத்த முடிவிற்காகவோ அல்லது ஈகோவை அடிப்படையாக கொண்டோ எடுத்த முடிவுகளில் தங்குவது நல்லதல்ல.
முறையாக முடிவெடிக்க நாம் செய்ய வேண்டியது:
உணர்ச்சி பூர்வமாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது. முடிவு எடுப்பதில் நமது உள்ளுணர்வு அதிக பங்கு வகிக்க வேண்டும்.
மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதற்காக, ஒரு முடிவை வலிந்து நமக்குள் திணிக்கக்கூடாது.
நிறைய தகவல்களை சேகரித்து அறிவுப்பூர்வமாக முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவும் மாறுதலுக்கு உட்பட்டதுதான்.
அளவுக்கு மீறி ஆலோசனை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
இது பற்றிய மேலும் புரிதலுக்கு டேனியல் கானமென் எழுதிய திங்கிங் பாஸ்ட் அன்ட் திங்கிங் ஸ்லோ புத்தகத்தை படிக்கலாம். ” என்றார்.
இது குறித்து மனநல மருத்துவர் டாக்டர் சேலம் மனோரக்ஷா மனநல மருத்துவ மைய மனநல மருத்துவர் மற்றும் இயக்குநர் எஸ்.மோகன வெங்கடாசலபதி கூறும் போது, “சினிமா கவர்ச்சிக்காக அந்த வசனம் சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு முடிவை ஆராய்ந்து நாம் எடுத்திருந்தாலும், காலப்போக்கில் அதில் மாற்றம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஒரு முடிவை எடுத்து விட்டு அதிலிருந்து மாறமாட்டேன் என்று சொல்வது சில இடங்களில் செல்லுபடியாகாது. அது நமக்கு நிறைய நஷ்டங்களை உண்டாக்கிவிடும். அதெல்லாம் அவர்கள் சினிமாவுக்காக விடுகிற வசனங்கள்.
பர்சனல் வாழ்கையிலும், தொழில் வாழ்கையிலும் இலக்குகள் இருப்பது மிக முக்கியம். காரணம் தெளிவான இலக்குகள் இல்லாதபோதுதான் குழப்பம் வரும். இலக்குகளை நிர்ணயிக்கும் முன்னர் பலமுறை யோசித்து நன்றாக அதை நிர்ணயிக்க வேண்டும். நிர்ணயித்த பின்னர் அதில் விடாமுயற்சியோடு பயணிக்க வேண்டும். ஆனால் காலப்போக்கில் அதை கைகூடாத சூழ்நிலையில், அதற்கு மாற்றான ஒன்றை தேர்ந்தெடுத்து பயணிக்க வேண்டும்.” என்றார்.