தமிழ் சினிமாவில் சத்தியராஜ் என்னும் கோவை குசும்புக்காரர் பிடித்த இடைத்தை நான் சொல்லியா தெரிய வேண்டும் . கொடுக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதனை அத்தனை நேர்த்தியாக நடித்து, ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார். மகன் கதாநாயகனாக களமிறங்கினாலும் இவருக்கு இருந்த ஹீரோ வேல்யூ ஒரு போதும் குறையாமல்தான் இருந்தது. கமல்ஹாசன் , ரஜினிகாந்த், விஜயகாந்த் என அக்காலத்து சூப்பர் ஸ்டார்ஸுக்கு டஃப் கொடுத்த ஒரே வில்லன் சத்தியராஜ்தான். படிப்படியாக வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து ஹீரோவாக உயர்ந்து இன்று கட்டப்பாவாக நம் மனதில் பதிந்திருக்கிறார். இன்றைக்கும் அவருக்கு வில்லனாக நடிக்க அதிக விருப்பம் இருக்கிறது . அதனை பிங்க் வில்லா உடனான நேர்காணலில் சத்தியராஜ் பகிர்ந்திருக்கிறார்.
அதில் “ நான் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்தேன். அதிகமாக ரஜினிகாந்துடன் நடித்திருக்கிறேன்.1985ல் அவருடன் 27 படங்களில் வில்லனாக நடித்தேன். எனக்கு அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது பிடித்திருந்தது. ஹீரோக்களுக்கு நாயகிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் நான் மட்டும் நிலையான வில்லனாக இருந்தேன். கமலாக இருந்தாலும் ரஜினியாக இருந்தாலும் நான் நடிப்பதற்கான ஸ்கோப்பை எனக்கு கொடுத்தார்கள். அவர் நினைப்பதை பண்ணட்டும் என ஊக்கப்படுத்தினார்கள். நான் வில்லனாக நடித்த சமயத்தில் ஒரு சில படங்களி்ல் ஹீரோவாகவும் நடித்தேன். ஆனால் அதற்கு கிடைத்த கைத்தட்டல்களை விட வில்லனாக நிறைய கைத்தட்டல்கள் கிடைத்தன.
எனக்கு வில்லனாக நடிப்பதும் வசதியாக இருந்தது. அந்த காலக்கட்டத்தில் ஹீரோக்களுக்கு பற்றாக்குறை இருந்ததால்தான் நான் முழுமையாக நாயகனாக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இப்போதும் நான் வில்லனாக நடிக்க தயார். ஆனால் அது டாமினேட் செய்யும் வில்லன் கதாபாத்திரமாக இருக்க வேண்டும் . அப்படியாக வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன்.எனது தொழில் ஒரு பிக்னிக் போன்றது, 46 ஆண்டுகளுக்கு முன்பு நான் சினிமாவில் நுழைய விரும்பினேன்.
ட்ரெண்ட் செட்டிங் வில்லனாக வலம் வந்தேன். அதன் பிறகு படிப்படியாக ஹீரோவானேன்.எனக்கு எதுவும் சவாலாக இல்லை. உங்களுக்கு பிடித்த விடுமுறை இடம் எது என்று கேட்டால், நான் 'ஷூட்டிங் பிளேஸ்' அப்படினுதான் சொல்லுவேன். நான் நிறைய படங்களை நிராகரித்திருக்கிறேன். சமீபத்தில் வந்த பெரிய படம் ஒன்றையும் நிராகரித்தேன். அந்த படத்தில் பெரிய நடிகர் எனக்கு பதிலாக நடித்திருந்தார். அதனால் நான் அந்த படம் பெயரை சொன்னால் அவருக்கு மரியாதையாக இருக்காது” என்றார்.