மும்பைச் சேர்ந்த ரியான் பிராகோ(38) என்பவர், வியாபாரத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு பூனம் பிராகோ என்கிற மனைவியும், ஏழு வயதில் அனய்கா பிராகோ என்கிற மகளும் உள்ளனர். ரியான் பிராகோ, வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்க்க பல்வேறு இடங்களில் கடன் பெற்றுள்ளார். ஆனால், அவரால் தொடர்ந்து அதிலிருந்து மீண்டு வர இயலவில்லை. ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
கடன் கொடுத்தவர்கள் மீண்டும் அதை கேட்டு, நெருக்கடி தர ஆரம்பித்தனர். அனைத்து கதவுகளும் மூடிய நிலையில் சமாளிக்க முடியாமல் தவித்த ரியான், வசாய் நகரில் உள்ள தனது வீட்டை விற்க முடிவு செய்தார். ஆனால், அதற்குள் கடனாளாளர்கள் நெருக்கடி தர ஆம்பித்தனர். இதனால் வீட்டிலிருந்து குடும்பத்துடன் தலைமறைவான ரியான், காஷிமிரா பகுதியில் உள்ள சீசன்ஸ் ஹோட்டலின் இரண்டாவது மாடியில் ஒரு அறை எடுத்து தங்கினர். அங்கிருந்த படி, கடனை அடைப்பதற்கான நிதி திரட்டும் வேலையில் இறங்கினார் ரியான். ஆனால், அது நடைபெறவில்லை. இனியும் கடன்காரர்களை சமாளிப்பது சிரமம் என உணர்ந்த ரியான் பிராகோ, தற்கொலை செய்ய முடிவு செய்தார். அது குறித்து மனைவியிடம் கூறிய அவர், குழந்தையோடு தற்கொலை செய்யலாம் என அவரை சம்மதிக்க வைத்துள்ளார்.
அதன் பின், எலி மருந்து ஒன்றை வாங்கி வந்த அவர், உணவில் கலந்து மனைவி மற்றும் மகளும் அதை கொடுத்துள்ளார். அவர்கள் இறந்தபின், தானும் அதை உண்டு தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். உணவை உண்ட குழந்தை சிறிது நேரத்தில் இறந்துள்ளது. பூனம், உயிரிழக்காமல் சகஜமாக இருந்துள்ளார். விஷம் தன் மனைவிக்கு வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்த ரியான், அவரது கழுத்தை நெரித்துக்கு கொல்ல முயற்சித்திருக்கிறார். பூனம் மயங்கியதும் அவர் இறந்ததாக நினைத்து, ரியான் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து தெளிவுப் பெற்ற பூனம், காப்பாற்றக் கோரி கூச்சலிட்டார். சத்தம் கேட்ட ஓட்டல் ஊழியர்கள், உடனே அங்கு சென்று பார்த்த போது, பூனம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரை மீட்ட ஹோட்டல் ஊழியர்கள், பயந்தரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த போலீசார், ஹோட்டல் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சம்பவம் ஞாயிறு இரவு நடந்த நிலையில் , திங்கள் காலை 10 மணியளவில் ரியான் ப்ராக்கோ அங்கிருந்து புறப்பட்ட காட்சிகளை ஆய்வு செய்தனர். அதை வைத்து, ரியான் தற்கொலை முடிவு எடுக்காமல், முதலில் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தது தெரியவந்துள்ளது. தலைமறைவான அவர், எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அதே நேரத்தில் அவர் மொபைல் போன் கடை ஒன்றில் விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சிகிச்சை பெற்று வரும் ரியான் மனைவி பூனம், தற்போது அபாய கட்டத்தை தாண்டியதாக கூறப்படுகிறது.