இந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த 1989-ஆம் ஆண்டு வெளியான Pheri Bhetaula என்ற திரைப்படம் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். ஆனாலும் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான ஏ லவ் ஸ்டோரி என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன் பிறகு அடுத்தடுத்த பல வெற்றிப்படங்களில் நடித்தார். தமிழில் இந்தியன் , முதல்வன், பாபா, ஆளவந்தான் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார். அதன் பிறகு 2011-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தில், ஹீரோவுக்கு மாமியாராக நடித்து அசத்தியிருந்தார். 2012-ஆம் ஆண்டு கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா ஒருவருட போராட்டத்திற்கு பிறகு அதிலிருந்து மீண்டார். தற்போது புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்.
சமீபத்தில் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான ‘இந்தியா ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்பைசஸ் என்னும் திரைப்படத்தில் அவரின் நடிப்பு பலரின் பாராட்டை பெற்றது. அதில் இந்திய- அமெரிக்க வம்சாவளி பெண்ணாக நடித்திருந்தார் மனிஷா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனம் ஒன்று மனிஷா கொய்ராலாவிடம் நேர்காணல் நடத்தியது. அதில் தனது வாழ்க்கை மற்றும் எதிர்கால திட்டம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் மனிஷா கொய்ராலா.தான் நடித்த படம் மற்றும் அமெரிக்க , இந்திய கலாச்சாரம் குறித்து பேசிய மனிஷா, கலாச்சார பேசும் திரைப்படங்கள் என்பதை தாண்டி உலக மக்கள் அனைவரும் தனிமனிதனின் கதையால் ஒன்றிணைவார்கள் என்றார்.
மேலும் இளம் தலைமுறைகளில் யார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள் என்ற கேள்விக்கு, ”இன்றைய இளைய தலைமுறையினர் சிறப்பாக செயல்படுகிறார்கள் .அவர்கள் அனைவரும் உலகத் தரத்திற்கு இணையாக நடிக்கிறார்கள். கார்த்திக் ஆர்யன் ,ரன்பீர் கபூர் சிறந்தவர்ஆகியோர் சிறப்பாக நடிக்கிறார்கள். நடிகைகளில் ஆலியா பட்டின் நடிப்பை பார்த்து நான் வியந்திருக்கிறேன். நான் நடித்ததை விடவும் சிறப்பாக நடிக்கிறார் ஆல்யா. கங்கனா ஒரு புத்திசாலி நடிகை . குயின் படத்தில் அவர் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என பாராட்டியுள்ளார்.