தமிழர்களுக்கு அண்ணன் - தங்கை பாசம் என்றவுடன் முதலில் அந்த உறவை விவரிக்க பாசமலர்கள் என்ற அடையாளத்தையே குறிப்பிடுவர். அப்படி தமிழர்களின் வாழ்வியலில் கலந்த ஒரு வார்த்தையாக அமைந்த இந்த உறவை ஒரு படமாக கொடுத்தார் இயக்குநர் பீம்சிங். அண்ணன் தங்கை பாசத்துக்கு அடையாளமாக விளங்கிய ஒரு படம் தான் சிவாஜி கணேசன் - சாவித்திரி நடிப்பில் வெளியான 'பாசமலர்' திரைப்படம். 1961ம் ஆண்டு இதே நாளில் வெளியான இப்படம் இன்றும் 62 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


 



 


படத்தின் வெற்றிக்கு காரணம் :


எந்த காலகட்டத்தில் 'பாசமலர்' படத்தை பார்த்தாலும் பார்வையாளர்களின் கண்களை குளமாக்கும் ஒரு படம். அண்ணன் தங்கை இடையே இருக்கும் பாசப்போராட்டம், படத்தின் ஸ்கிரிப்ட், உருக்கமான உணர்வுபூர்வமான வசனங்கள், நடிகர்களின் திறமையான நடிப்பு, தத்ரூபமான காட்சிகள் போன்றவை படத்தின் வெற்றியை உறுதி செய்தது. மலையாள தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் கே.பி.கொட்டாரக்கரா இப்படத்தின் கதையை எழுதினார். கண்ணதாசனின் வரிகளுக்கு மெல்லிசை மன்னரின் இசை சேர்ந்ததும் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெல்லாம் கலக்கியது. அப்பாடல்கள் ஒலிக்காத இடமே இல்லை எனும் அளவிற்கு அற்புதமாக அமைந்தன. வாராயோ தோழி வாராயோ... பாடல் தான் இன்று திருமண விழாக்களிலும், மணிவிழா கொண்டாட்டங்களில் ஒலிக்கிறது. 


 



 


தமிழ் சினிமாவில் எத்தனை படங்கள் வெளியானாலும் ஒரு சில படங்கள் மட்டுமே நினைத்தாலே இனிக்கும் வகையை சேரும். அப்படி ஒரு படம் தான் வெற்றி விழா கண்ட 'பாசமலர்'. 62 ஆண்டுகளை கடந்தும் பசுமையான நினைவுகளை அள்ளி கொடுக்கிறது. அண்ணன் - தங்கை பாசம் இந்த உலகில் உள்ளவரை பாசமலர் படமும் நிலைத்து இருக்கும். 


மற்ற அண்ணன் - தங்கை சென்டிமென்ட் படங்கள் :


இன்றைய கால கட்டத்தில் ஏராளமான படங்கள் ரீ மேக் செய்யப்படுகிறது. ஆனால் பாசமலர் படத்தை ரீ மேக் செய்யும் தைரியம் இதுவரையில் யாருக்கும் வரவில்லை. காரணம் 62 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படம் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்றும் தொடர்கிறது. ஒவ்வொரு கலகட்டத்திற்கும் ஏற்ப அண்ணன் - தங்கை படங்கள் வெளியாகி கொண்டு தான் இருகின்றன. 


அண்ணன் தங்கை பாசம் என்ற சென்டிமென்ட் தமிழ் சினிமா உள்ள வரை கொண்டாடப்படும். அப்படி தமிழ் சினிமாவில் பாசமலர் படத்தை தொடர்ந்து ஏராளமான அண்ணன் - தங்கை சென்டிமென்ட் படங்கள் வெளியாகின. தர்ம யுத்தம், கிழக்கு சீமையிலே, சமுத்திரம், சொக்கத்தங்கம், திருப்பாச்சி, நம்ம வீட்டு பிள்ளை, அண்ணாத்த, பாண்டவர் பூமி, காதலுக்கு மரியாதை, சம்திங் சம்திங், வேதாளம், சிவப்பு மஞ்சள் பச்சை, கடைக்குட்டி சிங்கம், முள்ளும் மலரும் போன்ற படங்கள் அண்ணன் - தங்கை பாசத்தை பறைசாற்றிய திரைப்படங்களாகும்.