பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், புதிய படங்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


2024 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகை தினம் என்றாலே புத்தாடைகள், விதவிதமான உணவு வகைகள் எல்லாம் நினைவுக்கு வருவதைப் போல புதுப்படங்கள் ரிலீஸூம் தவிர்க்க முடியாத ஒன்று. அந்த வகையில் வரும் பொங்கல் பண்டிகை திங்கட்கிழமை வருகிறது. இதனால் வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) வெளியாகும் படங்களுக்கு, ஜனவரி 17 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக படையெடுப்பார்கள் என்பது நிச்சயம். இதனைக் கருத்தில் கொண்டு கேப்டன் மில்லர், அயலான், மிஷன் சாப்டர் 1 ஆகிய 3 படங்கள் ரிலீஸாக உள்ளது.


கேப்டன் மில்லர்


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. இந்த படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ் , காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துள்ளது. கேப்டன் மில்லர் படம் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. 


அயலான் 


சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட வருடங்களாக உருவாகி வந்த “அயலான்” படம் ஒருவழியாக பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன்,  ஷரத் கேல்கர்,பானுப்ரியாபால சரவணன் உள்ளிட்டோர் என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள அயலான் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜனவரி 5 ஆம் தேதி வெளியான ஹாலிவுட் தரத்திலான ட்ரெய்லர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஏலியன் ஒன்று முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. இதற்கு நடிகர் சித்தார்த் டப்பிங் கொடுத்துள்ளார். அயலான் படம் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது. 


மிஷன் சாப்டர் 1 


அருண் விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1’. இந்த படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், இயல், அபி ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம்  அருண் விஜய்யின் முதல் பண்டிகையில் ரிலீசாகும் படமாகும். மிஷன் சாப்டர் 1 படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. 


தொடங்கியது முன்பதிவு 


இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது. முதல் நாள் முதல் காட்சி  காலை 9 மணிக்கு தான் இருக்கும் என்பதால் அதனை தவிர்த்து மற்ற அனைத்து காட்சிகளும் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விட்டது. அயலான் மற்றும் மிஷன் சாப்டர் 1 படத்தின் முன்பதிவு இன்று இரவு அல்லது நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.