இசையமைப்பாளர் தேவா நேற்று தன் 72-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், 'தேவா The தேவா' எனும் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தனியார் சேனலான பிளாக்ஷீப் டீம் உடன் இணைந்து இந்நிகழ்ச்சியை ரசிகர்களுக்காக தேவா நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இணையத்தில் தேவா குறித்த ஹாஷ்டேக்கும், சுவாரஸ்யத் தகவல்களும் பகிரப்பட்டு வருகின்றன.
தமிழ் சினிமாவில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என இரு பெரும் ஜாம்பவான்கள் 90களில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் தன் காந்தக் குரலாலும், நிலம் சார்ந்த இயல்பான கானா பாடல்களாலும் கோலிவுட் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் ’தேனிசைத் தென்றல்’ எனக் கொண்டாடப்படும் தேவா.
நடிகர் ரஜினிகாந்தின் ’சூப்பர் ஸ்டார்’ கார்டுக்கான பிஜிஎம் தொடங்கி அவரது அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட பிளாக் பஸ்டர் படங்கள் என 405 படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார்.
இசை தாண்டி, ’சலோமியா’ பாடல் முதல் ’மஞ்சனத்தி’ வரை தேவாவின் நேட்டிவிட்டி பொருந்திய காந்தக் குரலுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை.
அந்த வகையில் தேவா பாடி இசையமைத்த பாடல் ஒன்றை மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பாராட்டிய சுவாரஸ்யச் செய்தி இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.
சூர்யா, முரளி நடித்த ‘காதலே நிம்மதி’ படத்தில் இடம்பெற்ற “வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி” பாடலை மு.கருணாநிதி பாராட்டிய கதையை தேவா முன்னதாக தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கதை- வசனம் எழுதி தேவா இசையமைத்த ’பெண் சிங்கம்’ படத்துக்காக பணிகளின் போது இந்தப் பாடல் குறித்து பாராட்டியுள்ளார்.
”இந்தப் பாடலை என்னை பாடச் சொல்லி கேட்டார். பின், எப்படி இந்த ஸ்லாங்கை பிடிச்ச என்றும், “காதல் ஒரு கண்ணாடி.. அதை உடைச்சிடாம பாக்குறவன் கில்லாடி” எனும் தத்துவத்தை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் எப்படி வைத்தாய் என்றும் வியந்து பாராட்டினார்” என தேவா தெரிவித்துள்ளார்.
இந்த சுவாரஸ்யத் தகவல் இணையத்தில் தேவாவின் பிறந்த நாளான இன்று பகிரப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறது