இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் சமூகத்தின் அவலம் குறித்த கேள்விகளை முன்வைத்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம். இந்த திரைப்படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கூத்துக்கலைஞர் நெல்லை தங்கராஜ். காய்ச்சல் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட தங்கராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார், அவரது உடல் அஞ்சலிக்காக நெல்லை வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், வாழை படப்பிடிப்பு தளத்திலிருந்து நேரடியாக வருகை தந்து நெல்லை தங்கராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பரியேறும் பெருமாள் படத்தில் அப்பாவாக நடித்திருந்தார். மிகச் சிறந்த ஆளுமை. எங்கள் இருவருக்கும் அப்பா பையன் உறவு இருந்தது. இன்று காலையில் இறந்த செய்தி வரும் பொழுது படப்பிடிப்பில் தான் இருந்தேன். தனது குடும்பத்தையும் தன்னையும் காப்பாற்ற தொடர்ந்து உழைத்தவர். கிடைத்த ஒரே வாய்ப்பில் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் தங்கராஜ் என்று புகழாரம் சூட்டினார்.
அதேபோன்று தேடி கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கலைஞரான தங்கராஜ் அனைவரின் மனதிற்குள்ளும் சென்று அகத்தையும் ஒவ்வொருவரின் சுயத்தையும் கேள்வி கேட்டவர். அவரின் கனவு பயணம் மிகத் தாமதமாகதான் தொடங்கியது. அது இவ்வளவு சீக்கிரம் முடியும் என நினைத்து பார்க்கவில்லை என்றார். தொடர்ந்து அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டவர் அவரது குடும்பத்தினருக்கு தொடர்ந்து உதவிகள் செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார். முன்னதாக தனது டிவிட்டர் பக்கத்தில் ”ஆங்காரமாய் ஆடியது போதும், இளைப்பாறுங்கள் அப்பா” 💔 ”என் கடைசி படைப்பு வரையிலும் உங்கள் பாதச்சுவடிருக்கும்” என்று உருக்கமாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் மறைந்த கூத்துக்கலைஞர் தங்கராஜின் உடல் நாளை காலை 8 மணி அளவில் எரியூட்டப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.