அரூர் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவியின் உடல், வனப்பகுதியில் எலும்புக் கூடுகளாக கண்டெடுக்கப்பட்டது. எலும்புக் கூடு மற்றும் தடயங்களை சேகரித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எஸ்.அம்மாபாளையம் முள்ளிகாடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெருமாள் என்பவரின் மகள் ஞானசௌந்தர்யா கோயமுத்தூரில் கடந்த 9 மாதத்திற்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பொது தேர்வை முடித்துவிட்டு தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வந்துள்ளார். அப்பொழுது திருவிழா நடைபெறும் பொழுதே இவர் காணாமல் போனதாகவும், தனது மகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என தெரிவித்து இவருடைய பெற்றோர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் இவருடைய பெற்றோர், உறவினர்கள் என அனைவரும் கோயமுத்தூர், திருப்பூர், அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் மாணவி குறித்து எந்த ஒரு தகவலும் சேகரிக்க முடியவில்லை. இதனால் தன்னுடைய மகள் உயிரோடு தான், யாருடைய பாதுகாப்பிலே இருக்கிறாள் என பெற்றோர்கள் எண்ணியிருந்துள்ளனர்.
இந்நிலையில் எஸ்.அம்மாபாளையம் அருகே உள்ள மலைப் பகுதியில் ஒரு சடலம் தூக்கில் தொங்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால் உடல்கள் தசைப்பகுதிகள் எதுவும் இல்லாமல் ஒருசில எலும்புக்கூடுகள் மட்டுமே இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையறிந்த பெருமாள் தனது மகளாக இருக்குமோ என எண்ணி, உறவினர்களுடன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்பொழுது எலும்பு கூட்டில் இருந்து சையினை வைத்து தனது மகள் தான் என்று உறுதி செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து கோட்டப்பட்டி காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து வந்த காவல் துறையினர், சோதனை செய்து, மருத்துவ குழுவினரை வரவழைத்து, அங்கு இருந்த பெண்ணின் எலும்பு கூடுகள், அவர் பயன்படுத்திய வாட்ச் உள்ளிட்டவர்களை சேகரித்து டிஎன்ஏ டெஸ்ட் மற்றும் உடற்கூறு ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். இந்த பெண் தற்கொலை செய்து கொள்ளவில்லை, யாரோ கொலை செய்திருக்கலாம் என்றும், மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் உறவினர்கள் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் பெண்ணின் மரணம் தற்கொலையா? கொலையா? என காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த, 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பெண்ணின் உடல் அடர்ந்த காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில், எலும்பு கூடுகள் மட்டுமே கிடைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.