‛சோறு கொண்டு போற புள்ள உன் சும்மாட இறக்கு... சோறு தண்ணி சாப்பிடல கொஞ்சம் ஊட்டிவிடு எனக்கு...’ கிராமத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் பல ஹிட் பாடல்களை கொண்ட படம் என் ஆசை மச்சன். புரட்சி கலைஞர் விஜயகாந்த், ரேவதி, முரளி, ரஞ்சிதா உள்ளிட்டோர் நடித்த என் ஆசை மச்சன், 1994ல் வெளியான திரைப்படம்.
தற்போது நடிகராக அறியப்படும் ஆர்.சுந்தர்ராஜன் தான், இந்த படத்தை இயக்கினார். விஜயகாந்த்-ஆர்.சுந்தர்ராஜன் கூட்டணியில் பல மெகா ஹிட் படங்கள் உள்ளன. அந்த வரிசையில் என் ஆசை மச்சன் திரைப்படமும் பெரிய ஹிட். 28 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் வெளியான என் ஆசை மச்சன், கிராம, குடும்ப, உறவுகளை பின்னணியாக கொண்ட திரைப்படம்.
இளையராஜா-விஜயகாந்த-சுந்தர்ராஜன் என்கிற கூட்டணி கொடுத்த மெகா ஹிட் பாடல்கள் இன்றும் மறக்க முடியாது. ஆனால், இந்த படத்திற்கு இசை தேனிசை தென்றல் தேவா. தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்துமே பட்டித்தொட்டி எல்லாம் இசைத்தது.
- ஆடியில சேதி சொல்லி...
- கருப்பு நிலா நீ தான் கலங்குவது...
- ராசி தான் கை ராசி தான்...
- சோறு கொண்டு போற புள்ள...
- தலைவனை அழைக்குது...
- தென் மதுரை...
- விலை விரிக்கிறேன்...
இந்த பாடல்கள் இன்றும் ஏதாவது ஒரு டிவியில் ஒளிபரப்பாகும், அல்லது ஏதாவது ஒரு எப்.எம்.,யில் ஒலிபரப்பாகும். அந்த அளவிற்கு, கதையோடு பயணிக்கும் இசையும், பின்னணியும் தந்திருப்பார் தேவா. பெற்றோரை இழந்த நிலையில், சிறுவனான ஆறுசாமி, பிறந்த குழந்தையாக இருக்கும் தன் தம்பி சுப்பிரமணியை வளர்ப்பதும், சிறு வயதிலிருந்தே ஆறுசாமியின் முறைப்பெண்ணாக வளரும் தாயம்மா, அந்த குடும்பத்தை தாங்கி ஆளாக்குவது தான் கதை. ஆறுசாமியாக விஜயகாந்த், சுப்பிரமணியாக முரளி, தாயம்மாவாக ரேவதி.
திருமணம் ஆகாமல், ஒரு குடும்பத்தின் மூத்தவனும், அவனை மணக்கவிருக்கும் பெண்ணும், தன் குடும்ப உறுப்பினர் ஒருவரின் ஆசையை நிறைவேற்ற தங்களை தியாகம் செய்வதும், தன் பாசத்திற்குரியவரின் காதலை சேர்த்து வைப்பதும் என் ஆசை மச்சனின் மாஸ்டர் ஸ்ட்ரோக் திரைக்கதை.
90களில் கொண்டாடப்பட்ட திரைப்படம். ரஜினி, கமல் போல தனக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த விஜயகாந்த், தனது பிறந்தநாளுக்கு மறுநாள் ரிலீஸ் செய்த திரைப்படம். தியேட்டர்களை திருவிழாவாக்கிய திரைப்படம். கேசட் வடிவில் பைஃரசி இருந்த காலம் அது. அதையும் முறியடித்து, தியேட்டர்களுக்கு பொதுமக்களை அழைத்து வந்த திரைப்படம். சிறுமியாக மோனிகா, கசன்கான், காந்திமதி, ராதாரவி, தளபதி தினேஷ், பாலு ஆனந்த் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கும்.
வேட்டி சட்டையில் விஜயகாந்த், சுங்குடி சேலையில் ரேவதி என பார்க்கவே இருவரும் அவ்வளவு ரம்மியமாக இருப்பார்கள். இன்று விஜயகாந்தின் நிலையை பார்க்கும் போது, இந்த படத்தில் வரும் விஜயகாந்தின் தோற்றத்தை பார்த்தால், கண்ணீர் வருவதை தடுக்க முடியாது.
தன் ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றிய போது, விஜயகாந்தின் பிரச்சாரத்தில் ‛ராசி தான் கை ராசி தான் உன் முகமே ராசி தான்’ என்கிற பாடலை தான் ஒலிபரப்பினார்கள். அந்த அளவிற்கு அரசியல் வாழ்விலும் தனக்கு உதவிய படமாக என் ஆசை மச்சான் படத்தை விஜயகாந்த் பார்த்தார்.
சின்னத்திரையில் அவ்வப்போது ஒளிபரப்பாகும் இந்த திரைப்படம், விஜயகாந்திற்கு எப்படி முக்கியமான படமோ, அதே மாதிரி தான், நடிகை ரேவதிக்கும் மிக முக்கியமான படம்.