2008ஆம் ஆண்டு வெளியான ’எல்லாம் அவன் செயல்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தனி கவனம் ஈர்த்தவர் நடிகர் ஆர்.கே. அதனைத் தொடர்ந்து அவன் இவன், பாயும் புலி ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.
தொழிலதிபர் டூ நடிகர்
திரைத்துறையில் நுழைவதற்கு முன்பிருந்தே வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கி வரும் ஆர் கே, சினிமாவில் பயணிக்கத் தொடங்கிய பின்னரும் ஏதேனும் ஒரு பிஸ்னசில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், முன்னதாக கைகளில் ஒட்டாமல் முடிக்கு டை அடிக்கும் வகையில் இவர் கண்டுபிடித்த ’விஐபி ஹேர் கலர் ஷாம்பூ’ என்கிற புதிய தயாரிப்பு உலகெங்கும் பிரபலமடைந்துள்ளது.
ஹேர் டைக்கு காப்புரிமை
விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற இந்த தயாரிப்பை கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக மார்க்கெட்டில் உலா வரச்செய்து இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளார் ஆர்கே.
மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஒரே இடத்தில் 1005 பேரை இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்புவை பயன்படுத்த செய்து மிகப்பெரிய கின்னஸ் சாதனை நிகழ்த்தி இதன் தரத்தை நிரூபித்தார் ஆர்கே. தற்போது அதற்கான அங்கீகாரமாக இந்திய அரசு இவருக்கு இந்தத் தயாரிப்புக்காக 20 ஆண்டு காப்புரிமையை வழங்கியுள்ளது.
இந்நிலையில், முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ஆர். கே கூறியதாவது:
”நான் 18 முனைவர் பட்டம் வாங்கியுள்ளேன். ஆனால் இதை நான் எங்கும் கூறியது இல்லை. இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். ஆனால் இன்று இதை சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
நான் கடந்து வந்த பாதை மிகவும் கரடுமுரடானது. உலகம் முழுவதும் க்ளவுஸ் போட்டு தான் ஹேர் டை பயன்படுத்த வேண்டும் என வெள்ளைக்காரர்கள் சொல்லி உள்ளார்கள். க்ளவுஸ் போடாமல் ஹேர் டை தொடவே முடியாது என்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என நாமும் அவர்கள் சொன்னால் நம்புகிறோம்.
ஆனால் இதையெல்லாம் மீறி, ஒரு இந்தியன் சொன்னால் 50 % மார்க் கம்மி. அதிலும் அவன் தமிழனாக இருந்தால் இன்னுமொரு 40 % கம்மி. ஆனால் நான் க்ளவுஸ் இல்லாமல் பயன்படுத்தும் ஹேர் டை கண்டுபிடித்துள்ளேன். பல சிக்கல்களை இதனால் கடந்து வந்தேன். க்ளவுஸ் இல்லாமல் ஹேர் டை பயன்படுத்தினால் அது விஷம், இறந்து விடுவோம் என்றார்கள்.
உலக நாடுகளில் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது
உலகம் முழுவதும் மிகப்பெரும் ஹேர் டை ஷாம்புக்கள் ஏற்கெனவே சந்தையில் உள்ளன. அவர்களால் பெரும் சிக்கல்களை சந்தித்தேன். சிக்கன் சாப்பிட்டாலே கையில் சிவப்பு கலர் ஒட்டுகிறது. ஆனால் ஹேர் கலரை எப்படி வெறும் கைகளால் தொட முடியும் என்றார்கள். என் மீது என்ன குற்றச்ச்சாட்டுகள் சொன்னாலும் எனக்கு போராடப் பிடிக்கும். பேசி ஜெயிப்பது எனக்கு பிடிக்கும்.
கைகளால் தொடக்கூடாது என சொல்கிறீர்கள் சரி, ஆனால், மீசை, தாடியில் டை அடிக்கும்போது, உதடுகளுக்கு நீங்கள் என்ன பாதுகாப்பு வைத்திருக்கிறீர்கள் என்றேன். யாராவது மீசையில் தடவி இறந்துள்ளார்களா என நான் விவாதித்தேன். அதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். தற்போது என் பொருள் உலக அளவில் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
கின்னஸ் ரெக்கார்ட்
இந்தியாவில் இதைக் கண்டுபிடித்துள்ளேன் என அனைவரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். எகிறியடித்த பந்து போல் மீண்டும் மீண்டும் வருகிறேன். GMD, WHO GMD என உலகிலுள்ள அத்தனை சான்றிதழ்களும் வைத்திருக்கிறேன். நான் இந்தியாவில் பிறந்தது மட்டுமே என் தவறு.
இதையே நான் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கண்டிபிடித்திருந்தால் வேற லெவலில் இருந்திருப்பேன். இதையெல்லாம் தாண்டி இவர்கள் என்ன செய்தால் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என யோசித்தேன். அதனால் தான் கின்னஸ் ரெக்கார்டில் ஈடுபட்டேன்
எனக்கு இந்தியன் எனும் வெறி இருந்தது. அதனால் தான் சுதந்திர தினத்தில் தேசியக் கொடி அணிந்து அதை செய்தேன். தலையில் இருக்கும் வெள்ளையன கூட இந்தியன் அனுமதிக்க மாட்டான். இது இந்தியன் ப்ராடக்ட். இந்திய அரசாங்கத்துடன் மோதுகிறேன், ஆனால் காப்புரிமை பெற வெளிநாட்டுக் காரன் எனக்கு செலவு செய்கிறான்.
இதுவே என் வாழ்நாள் சாதனை
உலக பணக்காரர்கள் குறித்து பேசுகிறோம் ஆனால் தமிழனின் கண்டுபிடிப்பு பற்றி பேசுவதில்லை. ஐந்து ஆண்டுகள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வெற்றியடைந்த தயாரிப்பு என்னுடையது. இது அறிவியல், எனவே நிரூபிக்கப்பட்டது. நீங்கள் இதற்கு என்ன ஆதாரம் கேட்டாலும் நான் தருகிறேன். சென்ற வாரம் 20 ஆண்டுகளுக்கான காப்புரிமையை இந்த அரசாங்கம் எனக்கு வழங்கியது.
இது பெரும் சாதனை. எனக்கு கொடுத்ததால் இது சாதனை அல்ல. எனக்கு கொடுக்கக்கூடாதென்று பலரும் செலவு செய்திருக்கிறார்கள். எனக்கு போட்டியாளரே கிடையாது. இந்த ஷாம்புவை வெறும் கையால் தொட்டுப் பார் என கடைக்காரரிடமும் சவால் விட்டிருக்கிறேன். நீங்கள் அத்தனை ஹேர் டை ப்ராகடையும் கையால் எடுத்துப் பாருங்கள். ஆனால் என்னுடையதை நான் தொடுவேன். கைகளில் ஒட்டினால் சொல்லுங்கள். இன்றைக்கு அரசு எனக்கு காப்புரிமை வழங்கியுள்ளது.
நான் கடந்து வந்த பாதையில் 18 முனைவர் பட்டம் எனக்கு உதவி செய்துள்ளது. ஆனால் இவ்வளவையும் தாண்டி இந்த அரசு என் தயாரிப்புக்கு காப்புரிமை வழங்கியதையே நான் வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறேன். அதில் மாற்றமே இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகம் முழுவதும் தலைமுடிக்கு அடுத்து தலையாய பிரச்னையாக இருக்கும் குறட்டைக்கும் தான் ஒரு புது தயாரிப்பை விரைவில் காப்புரிமை பெற்று அறிமுகப்படுத்த உள்ளதாகவும் ஆர் கே தெரிவித்துள்ளார்.