கல்வியின் முக்கியத்துவம் குறித்து நாம் அனைவரும் அறிந்தாலும், முழுவதுமாக கல்வியைப் பெறும் வாய்ப்பு பலருக்கும் கிடைப்பதில்லை. சிலருக்குக் கல்வி பெறுவதற்கான வசதி இருப்பதில்லை; சிலருக்குக் கல்வியை முடிப்பதற்கு முன்பே வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் வாய்ப்புகள் கிடைத்து விடுவதால் முழுவதுமாக கல்வி பெற முடிவதில்லை. தென்னிந்தியாவின் முன்னணி நடிகர், நடிகைகள் எவ்வளவு கல்வி பெற்றிருக்கிறார்கள் என்று தெரியுமா? 


தென்னிந்திய முன்னணி நடிகர்களின் கல்வித் தகுதியை இங்கே பட்டியலிட்டுள்ளோம். 


அல்லு அர்ஜுன்



அல்லு அர்ஜுன் சென்னையில் உள்ள புனித பாட்ரிக் பள்ளியில் படித்தவர். தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள எம்.எஸ்.ஆர் கல்லூரியில் பி.பி.ஏ பட்டப்படிப்பு முடித்துள்ளார் அல்லு அர்ஜுன். 


சமந்தா



சமீபத்தில் அல்லு அர்ஜுனுடன் `ஊ சொல்றியா மாமா’ பாடலில் பட்டையைக் கிளப்பிய நடிகை சமந்தா, தனது பள்ளிப் படிப்பை பத்தாம் வகுப்பு வரை சென்னையில் இருந்த புனித ஸ்டீபன்ஸ் மெட்ரிக் பள்ளியில் பயின்றவர். அதன்பிறகு, சென்னையின் ஹோலி ஏஞ்சல்ஸ் உயர்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வி பெற்றார் சமந்தா. தொடர்ந்து அவர் வர்த்தகத் துறையில் பட்டப்படிப்பு முடித்து, தேர்ச்சி பெற்றார்.


தனுஷ்



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், பாலிவுட், ஹாலிவுட் ஆகிய திரைப்படத் துறைகளிலும் வலம் வருபவராகவும் இருக்கும் தனுஷ், தன்னுடைய தந்தை கஸ்தூரி ராஜா, அண்ணன் செல்வராகவன் ஆகியோரது விருப்பத்திற்கேற்ப கல்லூரிப் படிப்பைப் படிக்காமலே, திரைப்படத் துறைக்குள் நுழைந்தவர். சினிமாவில் நடிக்க தொடங்கிய பிறகு, தொலைதூரக் கல்வி மூலம் கணினி அறிவியலில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். 


சாய் பல்லவி



2015ஆம் ஆண்டு `பிரேமம்’ திரைப்படம் மூலமாக அனைவரையும் ஈர்த்தவர் நடிகை சாய் பல்லவி. தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக சாய் பல்லவி இருந்தாலும், அவர் பயின்ற துறையே வேறு. 2016ஆம் ஆண்டு, ஐரோப்பாவில் உள்ள ஜார்ஜியாவின் டிபிலிசி ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவர் சாய் பல்லவி. 


விஜய் தேவரகொண்டா



இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய `அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் மூலமாக பிரபலமான விஜய் தேவரகொண்டா, ஹைதராபாத்தில் உள்ள பதுருகா கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் பட்டப்படிப்பு பயின்றவர். 


தமன்னா



பாகுபலி உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களில் முன்னணி வேடங்களில் நடித்த நடிகை தமன்னாவுக்குத் தனது 13வது வயதிலேயே திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. பள்ளி ஆண்டு விழாவில் அவரது திறமையைப் பார்த்து அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட, அதனை ஏற்றுக் கொண்டு தனது திரைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார் நடிகை தமன்னா. தொடந்து சினிமாவில் நடித்து வரும் தமன்னா, மும்பையில் உள்ள நேஷனல் கல்லூரியில் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்.