பல வருடங்கள் கழித்து கற்றது தமிழ் படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் படம் வெளியானபோது அது பெரியளவில் கவனமீர்க்கவில்லை என்று ஸ்ரீகர் பிரசாத் வேதனை தெரிவித்துள்ளார்.


ஸ்ரீகர் பிரசாத்


தமிழ் சினிமாவின் முன்னணி படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத். கடந்த 35 ஆண்டுகளாக திரையுலகில் பணியாற்றி வரும் ஸ்ரீகர் பிரசாத் இந்தி , மலையாளம் , தமிழ், தெலுங்கு மொழிகளில்  600க்கும் மேற்பட்ட  படங்களுக்கு மேல் படத்தொகுப்பு செய்துள்ளார். இத்துறையில் இதுவரை 8 தேசிய விருதுகளை வென்றுள்ளார். தமிழின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் படங்களுக்கு எடிட்டராக எப்போதும் முதல் தேர்வாக இருந்து வருகிறார் ஸ்ரீகர் பிரசாத். 


 நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மணிரத்னம் தவிர்த்து தன்னை கவர்ந்த இயக்குநர்கள் குறித்து ஸ்ரீகர் பிரசாத் பேசியுள்ளார்.


கற்றது தமிழ் - ராம் 






இந்த நேர்காணலில் அவர்  “மணிரத்னம் தவிர்த்து இயக்குநர் ராம் என்னை கவர்ந்த இயக்குநர்களில் ஒருவர். அவரது கற்றது தமிழ் படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது எனக்கு ரொம்ப பிடித்தது.  முன்னும் பின்னுமாக செல்லக்கூடிய வகையில் அந்தப் படத்தின் கதையை நாங்கள் சொல்ல முடிவு செய்தோம். ஆனால் கற்றது தமிழ் படம் வெளியானபோது அந்த படம் சரியாக ஓடவில்லை என்று தெரிந்தபோது, ரொம்ப வருத்தமாக இருந்தது. ஆனால் இன்று அந்தப் படத்தை கல்ட் படமாக எல்லாரும் கொண்டாடுகிறார்கள். அந்த படம் தோல்வியடைந்த காரணத்தினால் தமிழ்நாட்டை தவிர்த்து வேறு எந்த மொழியிலும் படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை. இன்று எல்லாரும் கொண்டாடும் அந்த படம் தமிழ்நாட்டைத் தவிர்த்து வெளியே எங்குமே  வெளியாகவில்லை. “ என்று ஸ்ரீகர் பிரசாத் தெரிவித்துள்ளார். 


ஏழு கடல் ஏழு மலை


இயக்குநர் ராம் தற்போது இயக்கியிருக்கும் படம் ’ஏழு கடல் ஏழு மலை’. நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. சர்வதேச திரைப்பட விழாவான ராட்டர்டாம் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டு பெரும் கவனத்தை ஈர்த்தது.