Prakash Raj: தங்க நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் பிரணவ் ஜூவல்லர்ஸ் விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

 

நகைக்கடை விளம்பரம்:


 

திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது பிரணவ் ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடை. குறுகிய காலத்திலேயே சென்னை, மதுரை, கும்பகோணம், கோவை, புதுச்சேரி பகுதிகளில் தங்களது கிளைகளை நிறுவிய பிரணவ் ஜுவல்லர்ஸ், ஜீரோ கூலி, ஜீரோ சேதாரம் என கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டது. இதனால், பெண்களின் கவனம் பிரணவ் ஜுவல்லர்ஸ் மீது விழுந்துள்ளது. 

 

பழைய நகைகளை கொடுத்து விட்டு, ஒரு வடத்திற்கு பிறகு வந்து கேட்டால் எடைக்கு எடை புதிய நகை வழங்குவதுடன், அவற்றிற்கு கூலி, சேதாரம் எதுவும் இல்லை என விளம்பரப்படுத்தப்பட்டது. பிரணவ் ஜுவல்லர்ஸின் இந்த விளம்பரத்தில் நடிகர் பிரகாஷ் நடித்திருந்தார். கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி, பெண்கள் பலர் பிரணவ் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் முதலீடு செய்துள்ளனர். நகைக்கடையில் அடகு வைக்கப்பட்ட நகைக்கு புது நகைகளாக வாங்கி செல்ல முதலீட்டாளர்கள் காத்திருந்துள்ளனர். 

 

பிரகாஷ் ராஜூக்கு நோட்டீஸ்:


 

அந்த நேரத்தில் தான் தனது ஒவ்வொரு கிளைகளையும் பிரணவ் ஜுவல்லர்ஸ் மூடியுள்ளது. திருச்சியில் உள்ள நகைக்கடையும் இழுத்து மூடப்பட்டது. மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த ஜுவல்லர்ஸ் மூடப்பட்டதால், முதலீடு செய்த நூற்றுக்கணக்கான மக்கள் புகார் அளித்தனர். 

 

அதிக வட்டி தருவதாக கூறி நகையை பெற்று கொண்டு மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பிரணவ் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் மதன் மற்றும் கிருத்திகாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டது. இந்த நிலையில் மோசடியில் ஈடுபட்ட பிரணவ் ஜுவல்லர்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மோசடி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்தது குறித்து விளக்கம் அளிக்க ஆஜராகும்படி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

ஆருத்ரா மோசடி:


 

முன்னதாக கடந்த 20ம் தேதி திருச்சி, சென்னை உள்ளிட்ட நகைக்கடைகளில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது. அதில், லட்சங்களில் பணம் மற்றும் 11 கிலோ தங்கம் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதேபோன்று ஆருத்ரா நிறுவனத்தின் மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் சிக்கினார்.

 

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. அதில், நடிகர் ஆர்.கே.சுரேஷும் சிக்கினார்.