விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படம் நாளை வெளியாக இருந்த நிலையில், காலைக்குள் ரூ.2 கோடி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. 

 

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். இதில், விக்ரமுடன் இணைந்து ரிது வர்மா, ராதிகா, பார்த்திபன், விநாயகன், சிம்ரன் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளனர். 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நீடித்து வந்த நிலையில் அண்மையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டது. படம் நாளை ரிலீசாகும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
  

 

நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பில் இருந்த துருவ நடத்திரம் படம் இன்று படம் ரிலீசாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் புக்கிங் தொடராமல் இருந்து வந்தது. இதனால் துருவ நட்சத்திரம் படம் ரிலீசாகுமா, ரிலீசாகாதா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்தனர். இந்த சூழலில்  துருவ நட்சத்திரம் படம் வெளியாக சன்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில்  ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 2 கோடியை நாளை காலை 10.30 மணிக்குள் திரும்ப அளிக்க வேண்டும் என்ற நீதிமன்றம், நாளை காலை 10.30 மணிக்குள் பணத்தை வழங்கவில்லை என்றால் படத்தை வெளியிடக் கூடாது என கூறியுள்ளது. சிம்பு நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க ஒப்பந்தம் போட்டு, ரூ. 2.40 கோடியை பெற்ற கௌதம் மேனன் படத்தையும் எடுத்து முடிக்கவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை என ஆல் இன் பிட்சர்ஸ் பங்குதாரர் விஜய் ராகவேந்திரா வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

அதில், வாங்கிய பணத்தை திருப்பி தராததால் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இது குறித்து பேசியுள்ள கவுதம் வாசுதேவ் மேனன், “படத்தின் வெளியீட்டு தேதி இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் படத்திற்கு தடைக்கோரி கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், பணத்தை திருப்பி அளிக்காமல் படத்தை வெளியிடமாட்டோம் என்றும் கூறினார். 

 

2016ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் நிதி பிரச்சனை காரணம் படப்பிடிப்பு பாதியில் கைவிடப்பட்டது. பின்னர், திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் வரும் பணத்தை கொண்டு துருவ நட்சத்திரம் படத்தின் மீதி படப்பிடிப்பை முடித்ததாக கவுதம் வாசுதேவ் மேனன் கூறியிருந்தார். சுமார் 8 ஆண்டுகளாக இழிபறியில் இருந்த படம் நாளை வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவால் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி மேலும் தள்ளி போகிறது. இதனால், விக்ரம் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். எனினும், துருவ நடச்த்திரம் டிசம்பர் ஒன்றாம் தேதி ரிலீசாகலாம் என கூறப்படுகிறது.