விஜய் மக்கள் இயக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் ஈசிஆர் சரவணன் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் நடிகர் விஜய்யுடனான தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.


அவருடைய பேட்டி அடங்கிய வீடியோ வைரலாகப் பரவிவருகிறது.


அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:




என் வாழ்வின் மறக்க முடியாத அனுபவம், தளபதி நடித்த அழகிய தமிழ் மகன் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் நடந்தது. ஓஎம்ஆரில் தனியார் மருத்துவமனையில் ஷூட்டிங் நடந்தது. ஷூட்டிங் முடிந்து தளபதி,  காரில் வருகிறார். நான் அப்போது ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தேன். ஷூட்டிங் பார்க்க எனக்குத் தெரிந்து கொண்டவர்களை ஏற்றி வந்திருந்தேன். மீண்டும் அவர்களை ஏற்றிக் கொண்டு ஆட்டோவைக் கிளப்பினேன்.


அப்போது, திடீரென காரில் இருந்து 'உன் ஆட்டோலா வரட்டுமான்னு' என்னைப் பார்த்துக் கேட்டார். நான் அப்படியே அதிர்ந்து போய் என்ன அண்ணா இப்படிக் கேட்டுட்டீங்க. வாங்க, வாங்கன்னு சொன்னேன்.


ஏற்கெனவே என் ஆட்டோவில் ஷூட்டிங் பார்க்க வந்தவர்கள் இருந்தனர். மூன்று பேர் உள்ளே இருக்க அவர் அப்படியே இடித்துப் பிடித்து உட்கார்ந்து கொண்டார். ஆட்டோவைப் பார்த்துவிட்டு, பரவாயில்லையே ஆட்டோவ நன்றாக மெயின்டெய்ன் பண்ணியிருக்க என்றார். குழந்தை பிறந்திருப்பதைப் பற்றி கேட்டார். ஆமாம் அண்ணே பெண் குழந்தை பிறந்திருக்கா? சந்தியான்னு பேரு வச்சுருக்கேன்னு சொன்னேன். நல்ல பெயர்னு சொன்னார்.


டைட் ட்ராஃபிக்ல தான் போய்ட்டிருந்தேன். அப்போ பக்கத்துல போன பைக்கில் இருந்த பெண்.. வீட்டுக்காரர்கிட்ட, ‛ஏங்க ஆட்டோவில் விஜய்,’ என்றார். அந்த கணவரோ அவர் ஏண்டி இங்க வரப்போறாரு எனக் கூறி வண்டியை விட்டார்.


வழி நெடுக தளபதியைப் பார்த்துக் கையசைத்தவர்களுக்கு கை காட்டிக் கொண்டு அப்படியே ஜாலியா ஆட்டோவில் வந்தார். அவரோட கார் பின்னாடியே தான் வந்துக்கிட்டு இருந்துச்சு. ஆனாலும் அவர் என் ஆட்டோவில் வருவது நல்லா இருக்குன்னு சொல்லி வந்தார். ஒருவழியா அண்ணனை வீட்டில் இறக்கிவிட்டேன். கையைப் பிடித்து முத்தம் கொடுத்துச் சென்றார். இந்த மாதிரியெல்லாம் ஒரு தலைவர் பார்க்கவே முடியாது.


அவர் அந்த ஆட்டோவில் ஏறியதாலேயே 6 வருஷமா அந்த சீட்டையே நான் மாற்றாமல் இருந்தேன். பின்னர் ஆட்டோவைக் கொடுத்துவிட்டேன். ஆனால், அந்த சீட்டை மட்டும் என் வீட்டில் இன்னும் பத்திரப்படுத்தி வச்சிருக்கேன்.




திருமலை படத்தின்போது தளபதியை சந்தித்தேன். அழகிய தமிழ் மகன் படத்தின்போது என் ஆட்டோவில் வந்தார். அப்புறம், சர்க்கார் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். தமிழகம் முழுவதுமிருந்து முக்கியமான மாவட்டப் பொறுப்பாளர்கள் 100 பேரை அழைத்து வரச் சொன்னார். பூந்தமல்லி அருகே அரசியல் மாநாடு சூட்டிங் நடந்தது. அதில் நாங்கள் எல்லோரும் நடித்தோம்.


ஒரு ரசிகன் பட்டாசு வெடிப்பான், பாலாபிஷேகம் செய்வான், கட் அவுட் வைத்துக் கொண்டாடுவான். ஆனால் தளபதியின் ரசிகன் மட்டும்தான் அவர் கூடவே நடிக்கும் வாய்ப்பையும் கூடப் பெறுவான். 


ஒரு தம்பியாக, அண்ணனாக ரசிகரை அருகில் வைத்து அழகு பார்ப்பார் எங்கள் தளபதி.


இவ்வாறு அவர் கூறினார்.


விஜய்யின் தீவிர அரசியல் பிரச்சாரகர், ஈசிஆர் சரவணன். ஒருமுறை இவர் இனி விஜய்க்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்று கூறி பரபரப்பைக் கிளப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண