நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் 'லக்கி பாஸ்கர்'. நடிகர் துல்கர் சல்மான் லீட் ரோலில் நடித்துள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 




கடந்த ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியை சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக துல்கர் சல்மான் மிகவும் வித்தியாசமான ஒரு தோற்றத்தில் நடித்துள்ள திரைப்படம் 'லக்கி பாஸ்கர்'.


சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் 1980 -1990 காலகட்டத்தை சேர்ந்த ஒரு பேங்க் கேஷியரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. மீனாட்சி சவுத்ரி ஹீரோயினாக நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு ஏற்கனவே வெளியிட்டது. ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி மேலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 




இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் "லக்கி பாஸ்கர் படத்தின் ரிலீஸ் குறித்து உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை பாராட்டுகிறோம். இந்த படத்திற்காக நடிகர் துல்கர் சல்மான் எந்தவித காம்ப்ரமைஸும் இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார்.


80, 90 காலகட்டத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பதற்காக எங்களின் தொழில்நுட்ப குழுவினர் பெரும்பாடு பட்டு உழைத்து வருகிறார்கள். அதே சமயம் மிகவும் பிரம்மாண்டமான படமாக பான் இந்தியன் மொழிகளில் வெளியாக உள்ளது. அதனால் மற்ற மொழிகளின் டப்பிங் பணிகளின் தரத்தில் எந்த ஒரு குறைவும் வந்துவிடக்கூடாது என விரும்புகிறோம். இந்த பணிகள் முழுவதுமாக முடிய ஒரு சில கால அவகாசம் எடுத்துக் கொள்ள கூடும். அதனால் லக்கி பாஸ்கர் படத்தை தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.  


இதனால் வரும் தீபாவளியை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயனின் 'அமரன்', நடிகர் கவின் நடித்துள்ள 'பிளடி பெக்கர்' மற்றும் ஜெயம் ரவியின் 'பிரதர்' படங்களுடன் சேர்ந்து களத்தில் மோத உள்ளது துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' திரைப்படம்.