Lucky Baskhar: வாத்தி படத்தை எடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இந்திய சினிமாவில் பான் இந்திய நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். சீதா ராமம் போன்ற கிளாசிக் படத்திலும், கிங் ஆஃப் கோத்தா போன்ற கேங்ஸ்டர் படத்திலும் நடித்து அசத்தி இருப்பார் துல்கர் சல்மான். இந்தப் படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் பிரபல தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்க இருக்கும் ‘ லக்கி பாஸ்கர் ‘ படத்தில் துல்கர் சல்மான் நடிப்பதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஜூலை மாதம் துல்கர் சல்மான் பிறந்த நாள் கொண்டாடப்பட்டதை ஒட்டி லக்கி பாஸ்கர் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது.
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர். இதில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சமீப ஆண்டுகளில் தெலுங்கு சினிமாவில் வித்தியாசமான ஜானர்களில் படங்கள் தயாரித்து வெற்றிக் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் 'லக்கி பாஸ்கர்' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
லக்கி பாஸ்கர் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். படத்தொக்குப்பு பணியில் நவின் நூலி இணைந்துள்ளார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் படத்தில் ஹீரோயினாக மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக வெளியான போஸ்டரில் பணத்தின் நடுவே துல்கர் சல்மான் மறைந்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இதனால் படம் முழுவதும் பணத்தை சம்பந்தப்படுத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, 'ஒரு சாதாரண மனிதனின் அளவிட முடியாத உயரங்களை நோக்கிய அசாதாரண பயணம்' என்ற கருப்பொருள் தான் 'லக்கி பாஸ்கர்' படத்தின் ஒன்லைன் கதை எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த வாத்தி படத்தை வெங்கி அட்லூரி இயக்கி இருந்தார். கல்வியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த வாத்தி படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதற்கும் ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். படத்தில் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், சாரா, ஆடுகளம் நரேன், சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மேலும் படிக்க: Leo: லியோ இசை வெளியீடு விவகாரம்; ஒரே ட்வீட்டில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்