அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, இந்தாண்டின் இறுதியில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், பாரத் ராஷ்டிர சமிதி ஆளும் தெலுங்கானா, மிசோ தேசிய முன்னணி ஆளும் மிசோரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் சரிவை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, கடந்த மே மாதம் கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து மேல்குறிப்பிட்ட ஐந்து மாநில தேர்தல்களிலும் வெற்றிபெற்று மக்களவை தேர்தலுக்கு தயாராக முனைப்பு காட்டி வருகிறது காங்கிரஸ்.
"பாஜகவுக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்"
இந்த நிலையில், வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், "தெலங்கானாவில் வெற்றிபெறுவதற்கான சாத்தியம் இருக்கிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.
ராஜஸ்தானில் போட்டி கடுமையாக இருக்கிறது. ஆனால், நாங்கள் வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறோம். பாஜகவின் உட்கட்சியில் இப்படிதான் பேசப்படுகிறது. கவனத்தை திசைதிருப்புவதன் மூலம் பாஜக வெற்றி பெறுகிறது. அவர்கள் சொந்த கதையாடலை உருவாக்க அனுமதிக்காமல் இருப்பதே கர்நாடகாவில் இருந்து கற்று கொண்ட பாடம்" என்றார்.
நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த எம்பி குறித்து பாஜக எம்பி ரமேஷ் பிதுரி கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தியது குறித்து பேசிய ராகுல் காந்தி, "கர்நாடகாவில் நாங்கள் என்ன செய்தோம். பாஜகவால் சொந்த கதையாடலை வரையறுக்க முடியாத வகையில் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம்.
"கவனத்தை சிதறடிக்கும் பாஜகவின் உத்தி"
இன்று நீங்கள் திடீரென பிதுரி, நிஷிகாந்த் துபே ஆகியோர் பேசுவதை பார்க்கிறீர்கள். சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக விடுக்கப்படும் கோரிக்கையில் இருந்து திசை திருப்பவே பாஜக இப்படி செய்கிறது. இது மக்கள் விரும்பும் அடிப்படை விஷயம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். மேலும் அந்த விவாதத்தை அவர்கள் விரும்பவில்லை.
நாம் ஒரு விஷயத்தை கொண்டு வரும்போதெல்லாம், அவர்கள் கவனத்தை சிதறடிக்க இந்த வகையான செயலை செய்கிறார்கள். அதை எவ்வாறு கையாள்வது என்பதை இப்போது நாங்கள் கற்றுக்கொண்டோம். பாஜக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சூழ்நிலையில், அவர்கள் மக்கள் மத்தியில் கதையாடலை மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள்.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற எண்ணம் மக்களின் உண்மையான பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பும் நோக்கத்துடன் இருக்கிறது. இது பாஜகவின் கவனத்தை சிதறடிக்கும் உத்திகளில் ஒன்றாகும்" என்றார்.