தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து திரையுலகிலும் முக்கியமான நடன இயக்குநராக வலம் வருபவர் பிருந்தா. அதிலும், மணிரத்னம் படங்கள் என்றாலே நடன இயக்குநர் பிருந்தாவாக தான் இருக்கும். இப்போது அவரும் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ஹே சினாமிகா' படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார் பிருந்தா. இதில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு மார்ச்சில் சென்னையில் தொடங்கியது. இயக்குநர் மணிரத்னம், கே.பாக்யராஜ் இருவரும் முதல் காட்சியை இயக்க, குஷ்பு மற்றும் சுஹாசினி இருவரும் க்ளாப் அடித்துத் தொடங்கி வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






இந்த திரைப்படத்தின் முதல் பார்வை இன்று சூர்யா மற்றும் ஜோதிகாவால் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். வண்ணமயமான இந்த போஸ்டரில் துல்கர் பல காஸ்ட்யூம்களில் காணப்படுகிறார். அத்துடன் படம் காதல் மாதமான பிப்ரவரி 25ஆம் தேதி வெளியாகிறது என்ற அறிவிப்பும் வந்துள்ளது. இந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பிரீத்தா ஜெயராமன், இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, எடிட்டராக ராதா ஸ்ரீதர் மற்றும் கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இந்த படத்தில் துல்கர் சல்மான் தமிழில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். ஏற்கனவே குரூப் திரைப்படத்தில் அவர் பாடி இன்ஸ்டாகிராம் எங்கும் ஒலிக்கும் 'பக்கத்து வீட்டுல ரோஸாம்மா பெண்ணே' பாடலில் கொஞ்சம் தமிழ் கலந்திருந்தாலும் முழு தமிழ் பாடலாக இப்போதுதான் முதன்முறையாக பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 






இந்த படம் அன்றி 'சல்யூட்' என்ற திரைப்படத்தை ரோஷன் ஆண்ட்ரோஸ் இயக்க, பிரபல திரைக்கதை எழுத்தாளர்களான பாபி மற்றும் சஞ்சய் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். முதல் முறையாக ஒரு திரைப்படம் முழுவதும் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் துல்கர். வான் என்ற தமிழ் படத்தை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்க, இந்தப் படத்தில் துல்கருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பால்கி இயக்கத்தில் துல்கர் சல்மான் ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார், பால்கியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான பி.சி ஸ்ரீராம் தான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா லாக்டவுனின்போது பால்கி இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் தயார் செய்துள்ளார். திரில்லர் ஜார்னரில் இந்தப் படம் தயாராக இருக்கிறது.