அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில், இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.
கடந்தாண்டு வெளியான 'சீதா ராமம்' துல்கர் சல்மானுக்கு மிகப் பெரிய சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர் நடிப்பில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம். கேங்ஸ்டர் ஜானரில் பக்கா ஆக்ஷன் மூவியாக உருவாகியுள்ளது. துல்கர் சல்மானுடன் ஐஸ்வர்யா லக்ஷ்மி, ரித்திகா சிங், சார்ப்பட்டா பரம்பரை புகழ் 'டான்சிங் ரோஸ்' சபீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிங் ஆஃப் கோதா படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் காரைக்குடி பகுதிகளில் தான் அதிகம் நடைபெற்றது. 1980களில் நடைபெறும் பீரியட் படமாக உருவாகியுள்ள 'கிங் ஆஃப் கோதா திரைப்படத்தில், நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் லீடிங் ரோலில் நடித்துள்ளார்.
துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான 'கலாட்டாக்காரன்' பாடலை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இயக்குனர் சித்திக் மறைவையடுத்து இன்று வெளியாக இருந்த துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா படத்தில் ட்ரெய்லர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரபல மலையாள இயக்குநர் சித்திக், 1989ஆம் ஆண்டு வெளியான 'ராமோஜிராவ் ஸ்பீக்கிங்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து 'காட்ஃபாதர்', 'வியட்நாம் காலனி' உள்ளிட்ட ஏராளமான படங்களை இவர் இயக்கினார்.
விஜய் நடிப்பில் வெளியான ‘ப்ரெண்ட்ஸ்' படத்தின் இயக்குநரும் இவர் தான். ப்ரெண்ட்ஸ் திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. பின்னர் தமிழில் பிரசன்னா நடித்த 'சாது மிரண்டா', விஜய் நடித்த 'காவலன்', அரவிந்த்சாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்களை இயக்கினார்.
இயக்குநர் சித்திக் கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் பிரச்சினைக்காக தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேரள மாநிலம், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இயக்குநர் சித்திக் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக நடிகர் விஜய்யின் பிரெண்ட்ஸ், காவலன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். விஜயகாந்த் நடித்து பெரிய வரவேற்பை பெற்ற எங்கள் அண்ணா படத்தை இயக்கியவரும் சித்திக் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க,