அருவி, ராட்சசி, டிரைவர் ஜமுனா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர், எழுத்தாளர் கவிதா பாரதி. தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் ஒருவரும் இயக்குனருமான இளவரசுவின் நண்பரான இவர், முன்னதாக தங்கள் இருவருக்குமிடையேயான உரையாடல் குறித்து ஃபேஸ்புக் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


இன்றைய அவசர உலகில் வாகனங்களை முந்திச் செல்லாமல் பொறுப்புடன் வண்டி ஓட்டுவது குறித்து கவிதா பாரதி பகிர்ந்துள்ள இந்தப் பதிவு ஃபேஸ்புக்கில் அதிக லைக்குகளைக் குவித்து அதிக கமெண்டுகளையும் குவித்து வருகிறது.


அதில், “நாங்க கார் வாங்கி ஓட்டிப் பழகிய போது ஒளிப்பதிவாளர் நடிகர் அண்ணன் இளவரசு சொன்னது. "நம்ம வண்டியோட்டும்போது, யாராவது ஒருத்தர் நம்மைவிட வேகமாக முந்திட்டுப்போனா, கோபமோ, எரிச்சலோ அடையாதே... போட்டியா நெனைக்காதே... அவரை முந்தணும்ன்னு ஆக்சிலேட்டரை அழுத்தாதே...


அவர் வேகமாகப் போறத ரசிச்சு வழிவிட்டு, நிதானமாகப் போ.. அதே பயணத்துல எங்காவது ஒரு ஊர்ல மறுபடியும் அவரைச் சந்திப்போம்..." என்றார்.


அண்ணன் சொன்னதை நான் வாழ்க்கைக்கும் கடைபிடிக்கிறேன்.. வாழ்க்கைப்பயணம் சுகமாகப் போகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.



சிறந்த குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் தற்போது கலக்கி வரும் இளவரசுவின் இந்த பொறுப்புமிக்க அறிவுரை  ஃபேஸ்புக்வாசிகளின் பாராட்டுகளை அள்ளி வருகிறது.


முன்னதாக சர்தார், விருமன், நெஞ்சுக்கு நீதி, மலையாளப் படமான ஜனகண மண ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த இளவரசு, 1980 கள் தொடங்கி தமிழ் சினிமாவில் இயங்கி வருகிறார்.


கருத்தம்மா, நினைத்தேன் வந்தாய், பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நடிகர் ரஜினிகாந்த் பற்றி நடிகர் ராதாரவி கூறியது குறித்து இளவரசு பகிர்ந்திருந்தார். 


“லிங்கா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அணை கட்டும் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர். தூரத்தில் அணையின் மீது ரஜினி சார் நின்றிருந்தார். நான் ராதாரவி அண்ணன், விஜயகுமார் அண்ணன் எல்லாம் அப்படத்தில் நடித்திருந்தோம். அந்தக் குறிப்பிட்டக் காட்சி படமாக்கப்பட்ட போது ராதாரவி அண்ணன் பக்கத்தில் நான் அமர்ந்திருந்தேன்.


ரஜினி சாரை அப்படியே பார்த்துக்கிட்டு இருந்த ராதாரவி அண்ணன், ”ஏன் இளவரசு, இங்க எத்தனை பேர் சூட்டிங்கில் இருக்காங்க என்றார். நான் அண்ணே.. ஜீனியர் ஆர்டிஸ்ட் ஆயிரம் பேர், நாம ஒரு ஐம்பது, அறுபது பேர், வெள்ளைக்காரங்க 50 பேர் அப்புறம் 5 யானை என்றேன். அந்த நிற்கிறாரே அந்த ஒரு ஆள். அவர் இல்லாட்டி இங்க இன்னிக்கு நம்ம யாருக்காவது வேலை இருக்குமா? சாப்பாடு, சம்பளம், போக்குவரத்து எல்லாம் அந்த ஒற்றை ஆள் காரணமாக 1500 பேருக்குக் கிடைக்குது. காலம் ஒருத்தருக்குக் கொடுக்கிற வாய்ப்பைப் பார்த்தியா” என்றார்.


”என்ன ஒரு ஜாதகம். நானும் நடிச்சிட்டுத்தான் இருக்கேன். ஆனால் அப்படியே போகுது. அவர் தான் சூப்பர்ஸ்டார் ஆயிருக்காரு. அது எல்லாருக்கும் கிடைக்குமா” என்றார். பக்கத்தில் இருந்த விஜயகுமார் அண்ணனும் ஆமோதித்தார். நாங்கள் பேசி முடிக்க ரஜினி சார் சூட்டிங் முடித்து வந்தார்.


”அவரைப் பார்த்தவுடன் ராதாரவி அண்ணன் நாங்கள் பேசிகிட்டிருந்ததை அப்படியே அவரிடம் சொன்னார். ஆனால், அவரோ எவ்வித அலட்டலும் பெருமையும் இல்லாமல் பவ்யமாக எங்கள் எல்லோரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டுச் சென்றார்” எனக் கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.