சிறை என்றாலே கொசுத்தொல்லை நிரந்தரம். அண்மையில் தலோஜா மத்திய சிறையில் உள்ள கொசுத் தொல்லை குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில், சிறையில் விசாரணைக் கைதியாக இருக்கும் கேங்ஸ்டர் எஜாஸ் லக்டவாலா, கொசுக்கள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாட்டிலுடன் மும்பை அமர்வு நீதிமன்றத்துக்கு வருகை தந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.


எஜாஸ் லக்டவாலா, கொசுக்களைப் பிடித்த பாட்டில்களைக் காட்டி, சிறைக்குள் ஒவ்வொரு நாளும் பெரும்பாலான கைதிகள் இதைத்தான் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதியிடம் கூறினார். இதேபோன்ற மனுக்களுடன் பல்வேறு நீதிமன்றங்களை அணுகி வரும் மற்ற விசாரணைக் கைதிகளுடன் சேர்ந்து, லக்டாவாலா சிறைக்குள் கொசு வலைக்கான தேவையைக் கோரி வருகிறார். இருப்பினும் அவரது மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.


2020ம் ஆண்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டதால் அவர் தற்போது தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று லக்டவாலா நீதிமன்றத்தில் தெரிவித்தார். அப்போது அவர், கொசுவலை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதாகவும் ஆனால் மே மாதம் விசாரணைக் கைதிகளின் அனைத்து உடைமைகளையும் சிறை அதிகாரிகள் சோதனை செய்த பின்னர் அதை எடுத்துச் சென்றதாகவும்  கூறினார்.


மேலும், இரவு நேரத்தில் காவலுக்கு நியமிக்கும் ஊழியர்களுக்கும், நீதிமன்றங்களால் வலைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட சில விசாரணைக் காவலர்களுக்கும் மட்டுமே கொசு வலைகள் வழங்கப்படுகின்றன என்றார்.


இதை அடுத்து சிறை அதிகாரிகள் அவரது கோரிக்கையை எதிர்த்தனர் மற்றும் பாதுகாப்பு பிரச்சினையை எழுப்பினர், கொசு வலைகளை அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஆணிகள் மற்றும் சரங்கள் பாதுகாப்பு கவலைகளை ஏற்படுத்தக்கூடும் என்று கூறினர். இதை மறுத்த எஜாஸ் லக்டவாலா எந்த ஆணிகளும் சரங்களும் இல்லாமல் வலையைப் பயன்படுத்த முயன்றதாகக் கூறினார். ”விண்ணப்பதாரர்/குற்றம் சாட்டப்பட்ட எண்.1 ஓடோமோஸ் மற்றும் பிற கொசு விரட்டும் பொருட்களைப் பயன்படுத்தலாம், எனவே மனு நிராகரிக்கப்படுகிறது" என்று மும்பை நீதிமன்றம் கூறி அவரது மனுவை நிராகரித்தது.




மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் உள்ளவை உட்பட பல குற்ற வழக்குகளை எஜாஸ் லக்டாவாலா எதிர்கொள்கிறார்.


பாதுகாப்புக் காரணங்களுக்காக சிறையில் கைதிகள் பயன்படுத்திய கொசுவலைகளை சிறை அதிகாரிகள் மேமாதம் பறிமுதல் செய்தனர். இதை அடுத்து பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணைக் கைதிகள் வலைகளைப் பயன்படுத்த அனுமதி கோரி விண்ணப்பங்களை அனுப்பினர். சிறையில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், எனவே வலைகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் விசாரணைக் கைதிகள் நீதிமன்றங்களில் மனு அளித்து வருகின்றனர்.


இருப்பினும், சிறையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட பொருட்களின் பட்டியலில் கொசு வலைகள் குறிப்பிடப்படவில்லை என்று சிறை அதிகாரிகள் விதிகளை மேற்கோள் காட்டியுள்ளனர். ஒரு சில வழக்குகளில் தேவை உண்மையாக இருக்கும் நிலையில் மட்டுமே அவை அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் மேற்கொள்காட்டினர்.


ஜூலை மாதம், எல்கார் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் இதே போன்ற மனுவை நீதிமன்றம் நிராகரித்தது, மேலும் கொசுக்களுக்கு எதிராக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க சிறை கண்காணிப்பாளருக்கு வழிகாட்டுதல்களை வழங்கியது. செப்டம்பரில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, ஆர்வலர் வெர்னான் கோன்சால்வ்ஸ், டெங்கு நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவரது சக குற்றவாளியான கவுதம் நவ்லகா, வலைகளைப் பயன்படுத்த அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுகினார். அந்த மனு தற்போது நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது