“தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் யார்” என்கிற விவாதம் மீண்டும் ஒருமுறை விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இது குறித்த தங்களது கருத்துகளை பல்வேறு திரைப்பிரபலங்கள் தெரிவித்து வருகிறார்கள். பான் இந்திய சினிமா என்று திரைப்படங்கள் நகர்ந்து வரும் நிலையில் நடிகர்களுக்கு பட்டம் வழங்குவது அவசியமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.


சூப்பர்ஸ்டார் பட்டமே பிரச்னை தான்


ட்ரீம் வாரியர்ஸ்


கைதி, சுல்தான் , அருவி முதலிய படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. கமர்ஷியலாக நல்ல கதைகளை தேர்வு செய்வது மக்களிடம் தரமான சினிமாக்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் இதன் உரிமையாளரான எஸ்.ஆர் பிரபு.


சூப்பர்ஸ்டார் காலம் முடிவடைந்தது






 தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.ஆர்.பிரபு குறிப்பிட்டதாவது  “வணிக சினிமா சூழலில் ஒரே சூப்பர்ஸ்டார் என்கிற கருத்தாக்கத்திற்கான காலம் முடிவடைந்து விட்டது. ஒவ்வொரு நடிகருக்கு ஒவ்வொரு சந்தை மதிப்பு இருக்கிறது. இந்த மதிப்பு ஒவ்வொரு படத்திற்கும் அந்த படத்தின் தரம், வெளியாகும் தேதி, சரியான காம்பினேஷன் மற்றும்  போட்டி இவற்றைக் அடிப்படையாக கொண்டு மாறுபடும்.


இதை புரிந்துகொண்ட ஒரு சினிமாத் துறை ஒருவரை ஒருவர் ஆதரித்து இந்தத் துறையின் மார்கெட்டை உயர்த்தவே முயற்சிக்கும். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக தெலுங்கு சினிமாத் துறையைக் குறிப்பிடலாம். திரைத்துறையில் இருக்கும் ஒவ்வொரு நடிகர்கரும் ரசிகர்களும் இதை புரிந்துகொள்ள வேண்டும்.


இந்திய சினிமாவில் இது ஒரு புது நெறிமுறையாக மாறும் என்றும், இதனைப் பின்பற்றி இந்திய சினிமா தனது தரத்தை உயர்த்தும் என்றும் நான் நம்புகிறேன்” இப்படி அவர் கூறியுள்ளார். முன்னதாக நேற்று நடைபெற்ற ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் என்றாலே பிரச்னை என்று ரஜினிகாந்த் சொன்னதும், தன் பட்டம் குறித்தும் பேசியதும் இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ள நிலையில், எஸ்.ஆர்.பிரபுவின் இந்தக் கருத்து இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.