சாமியார் நித்தியானந்தா பற்றிய ஆவண படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
எண்டர்டைனர் :
நித்யானந்தா மீது ஏகப்பட்ட வழக்குகளும், குற்றவாளி என்ற அடையாளமும் இருந்தாலும் அவர் எக்காலத்திற்கும் திகட்டாத ஒரு சப்ஜெக்ட்டாக இருந்திருக்கிறார் என்றால் மிகையில்லை. தன்னை கடவுளின் அவதாரம் , சூரியன் உதிப்பதையே ஐந்து நிமிடம் தள்ளிப்போட்டேன், மீனாட்சி மீனாட்சினு சொன்னேன் அம்பாள் என்னாச்சி என்னாச்சினு கேட்டா என அவர் சீரியஸாக அள்ளிவிடும் பலவற்றையும் ரசிப்பதற்கென்றே தனிக்கூட்டம் உள்ளது. இதில் அவரது வித்தியாசமான கெட்டப்களும் அதற்கேற்ற கிராஃபிக்ஸ் காட்சிகளும்தான் ஹைலைட். அதற்காக அவர் குற்றவாளி என்னும் உறுதியான குற்றச்சாட்டுகளும் தொடர்ந்தே வருகிறது
பாலியல் குற்றச்சாட்டு:
நித்யானந்தா மீது இந்திய அரசு பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ அனுப்பியது. இதனை அறிந்த நித்தியானந்தா நேபாளம் வழியாக , தீவு ஒன்றிற்கு தப்பி ஓடிவிட்டார். மேலும் இந்துக்களுக்கான தனி நாடை உருவாக்கியுள்ளேன். கைலாசாவிற்கு பக்தர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து பலரின் கவனத்தை ஈர்த்தார். இந்த நிலையில்தான் சமீப காலமாக நித்தியானந்தா உடல்நிலை மோசமானதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. தன்னை சுற்றி இருந்தவர்களை கூட நினைவுப்படுத்தி பார்க்க முடியாமல் , தனது பெயரைக்கூட சரியாக எழுத தெரியாமல் இருந்த நித்தியானந்தா தற்போது கோமாவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆவணப்படம் :
கடந்த ஜூன் 2 ஆம் தேதி “My Daughter Joined a Cult” என்னும் பெயரில் நித்யானந்தாவின் ஆவணப்படம் (DisneyPlus Hotstar) ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. மூன்று பாகங்களாக வெளியாகியுள்ள இந்த படத்தை வைஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்க நமன் சரையா என்பவர் இயக்கியுள்ளார்.இது ஹிந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த ஆவணப்படம் நித்தியானந்தாவின் வாழ்க்கை முறை , அவர் எப்படி பக்தர்களை கவருகிறார், அவர்களை எப்படியெல்லாம் துன்புறுத்தினார், அவர் தியான பீடம் அமைத்தது எப்படி உள்ளிட்ட பல்வேறு கோணங்களை அலசுகிறது. இதில் நிதியானந்தாவின் முன்னாள் பக்தர்கள் , இந்நாள் பக்தர்கள் , வல்லுநர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலர் நித்யானந்தா குறித்த பல உண்மைகளை போட்டுடைத்துள்ளனர்.
இது குறித்து வெளியாகியுள்ள டிரைலரில் “ மில்லியன் கணக்கானவர்களால் நேசிக்கப்படுகிறார்? மில்லியன் கணக்கானவர்களால் வெறுக்கப்படுகிறார் ? யார் இவர் ? கடவுளா ? அல்லது சாமியாரா ? “ என குறிப்பிடப்பட்டிருக்கிறது.