தன்னிடம் வரும் நோயாளிகள் எல்லோரும் மெத்தப் படித்த மருத்துவர்கள் போல் டாக்டர் இந்த அறிகுறிகள் உள்ளதே அப்படியென்றால் எனக்கு இந்த நோயா? இதற்கு இந்த வைத்தியம் செய்யலாமா? இந்த பிராண்ட் மாத்திரைகள்தான் பெஸ்ட்டா என்று கேள்விகளால் துளைக்கும் காலமாகிவிட்டது.


மருத்துவர்களுக்கு வந்த இந்த சோதனையை வேடிக்கையாக, விரக்தியுடன் போஸ்டர் வைத்து வெளிப்படுத்தியுள்ளார் மருத்துவர் ஒருவர்.


கூகுள் கால் கிலோ பக்கோடா கிடைக்குமா என்று ஜோக் சொல்லும் அளவுக்கு கூகுள் தேடல் எதற்கெடுத்தாலும் நாடக்கூடிய தேடுபொறியாகிவிட்டது. நிச்சயமாக கூகுள் பல விஷயங்களில் அடிப்படை புரிதலை ஏற்படுத்தித் தருவதில் நமக்கு ஒரு வழிகாட்டி தான். ஆனால் அதை மட்டுமே நம்புவது என்பது அறிவியலின் மாண்பைக் குறைக்கும் செயல். அதை மக்களுக்கு உணர்த்தவே டாக்டர் ஒருவர் கெடுபிடி அறிவிப்பை தனது கிளினிக்கில் ஒட்டிவைத்துள்ளார்.






அந்த போஸ்டரில் எழுதப்பட்டிருப்பது என்ன?


நானே நோய் கண்டறிந்து நானே சிகிச்சையளித்தால் கட்டணம்: ரூ.200


நான் ரோய் கண்டறிந்து சொன்ன பின்னர் நீங்கள் சுயமாக சிகிச்சை செய்து கொள்வீர்கள் என்றால் கட்டணம்: ரூ.500


நீங்கள் கூகுள் டவுட்ஸ் கேட்டால் கட்டணம்: ரு.1000


கூகுளில் நீங்களே கண்டுபிடித்து பின்னர் அதிலேயே சிகிச்சையையும் தேடி செய்து கொள்வீர்கள் என்றால் கட்டணம்: ரூ.2000 என்று அதில் எழுதப்பட்டுள்ளது.


@gdalmiathinks என்ற ட்விட்டர் ஹேண்டிலில் தான் இந்த கட்டண விவரம் பகிரப்பட்டுள்ளது. ஆனால் ஒரு விஷயம் உண்மை, இந்த மருத்துவரின் கூற்றுப்படி கூகுளிலேயே எல்லாம் தேடுவோம் என்றால் எதற்கு மருத்துவர்.
நாம் மருத்துவர்களிடம் கூகுளைப் பார்த்துவிட்டு கேள்வி கேட்கும்போது 5 வருடம் மருத்துவம், அப்புறம் அதில் மேற்படிப்பு, நிபுணத்துவ படிப்பு, வெளிநாட்டில் ஆராய்ச்சி என்று தேர்ந்து வந்தவருக்கு எப்படி இருக்கும் என்று என்றாவது நாம் யோசித்திருக்கிறோமா?






டாக்டரின் இந்த குறிப்பிட்ட பதிவின் கீழ் நிறைய நெட்டிசன்கள் இந்தத் தவற்றை தாங்களும் செய்துள்ளதாகக் கூறி வருந்தி இருக்கின்றனர்.