'சார்பட்டா பரம்பரை’ படக்குழுவினருக்கு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளில் வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம், ஓடிடியில் அமேசான் ப்ரைம் வீடியோவில் கடந்த 22ஆம் தேதி வெளியானது. இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. படம் வெளியான சில மணி நேரங்களிலேயே #SarpattaParambarai ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகியது.
மெட்ராஸ் பாக்ஸிங் பரம்பரைகளில் சார்பட்டா- இடியப்ப பரம்பரைகளில் நடக்கும் ஒரு முக்கியமான போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பதுதான் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் கதை. இந்தப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. படத்தை பார்த்து வருபவர்கள் படம் குறித்து சிலாகித்து கருத்து கூறிவருகின்றனர். இந்தப் படத்தில் சார்பட்டா பரம்பரை பாக்ஸிங் குழுவினர் திமுககாரராகவும், நெருக்கடி நிலைக்குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 'சார்பட்டா பரம்பரை’ படத்தை பார்த்த திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ’சார்பட்டா பரம்பரை' முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் - கலைஞர் - கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது’ எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், ‘கபிலனாக அசத்தியுள்ள நண்பர் ஆர்யா, கழகத்துக்கார்-ரங்கன் வாத்தியாராக
பசுபதி சார், டான்ஸிங் ரோஸ் ஷபீர், வேம்புலியாக நடித்த ஜான் கொக்கன், ஜான் விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால் 30 ஆண்டு கால நல் ஆட்சியையே திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித் என சார்பாட்டா பரம்பரை திரைப்படம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.